கோத்தா டாமன்சாராவில் சிறந்த மாணவர்களுக்குப் பாராட்டு: இடைவிலகும் அபாயத்திலுள்ள மாணவர்களுக்கு உதவக் கவனம்

28 மே 2026, 6:52 AM
கோத்தா டாமன்சாராவில் சிறந்த மாணவர்களுக்குப் பாராட்டு: இடைவிலகும் அபாயத்திலுள்ள மாணவர்களுக்கு உதவக் கவனம்

ஷா ஆலம், மே 28- கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதி (DUN) அளவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் (SPM) சிறப்பு விருது நிகழ்ச்சியில் 130 மாணவர்கள் சிறப்பிக்கப் பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சிறந்த தேர்ச்சி நிலையை அடைந்தவர்கள் மட்டுமின்றி, கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய மாணவர்களுக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாக கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் தெரிவித்தார்.

"ஒவ்வொரு பள்ளியும் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்களை மட்டுமின்றி, தங்களின் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்திய 10 மாணவர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்ச்சி, மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு மட்டுமின்றி, கல்வியில் பெரும் பாய்ச்சலைச் செய்தவர்களையும் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார்.

"உதாரணமாக, இதற்கு முன் ஒருபோதும் தேர்ச்சி பெறாத ஒரு மாணவர், கடின முயற்சிக்குப் பின் இறுதியாக எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களும் இங்குச் சிறப்பிக்கப்
படுகிறார்கள்.

"சிறந்த மாணவர்களைச் சிறப்பிப்பதிலும், கோத்தா டாமன்சாரா இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் செகி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக்கு (Segi University & College) நன்றி," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த அங்கீகாரம் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற ஒரு தூண்டுகோலாக அமையும் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் நாட்டுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்," என்றார் அவர்.

மாணவர்களின் முயற்சிகளுக்கு வழங்கப்படும் இந்தப் பாராட்டு அவர்களைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்யும் எனத் தாம் நம்புவதால், இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படும் என இசுவான் கூறினார்.

"அவர்கள் தங்களின் கல்வியை முடித்துவிட்டுப் பட்டதாரிகளாகத் திரும்ப வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முனைவர் (PhD) பட்டம் வரை கல்வியைத் தொடர வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்," என்றார் அவர்.

அதே வேளையில், எஸ்.பி.எம் தேர்வை எழுதாமல் பள்ளியிலிருந்து இடைவிலகும் அபாயத்தில் உள்ள மாணவர்களைக் கண்டறிய, பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் தமது தரப்பு இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வது, பெற்றோரை இழந்தது மற்றும் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஆகியவை மாணவர்கள் தேர்வைத் தவிர்க்கும் முக்கியக் காரணங்களில் அடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

"எனவே, அவர்களுக்கு மாதாந்திர நிதியுதவியும் தகுந்த ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, நாங்கள் அவர்களை ஸகாத் (Zakat) வாரியம் மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகியவற்றுக்குப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் அவர்கள் தடையின்றி எஸ்.பி.எம் தேர்வை எழுத முடியும்.

"கடந்த ஆண்டு இவ்வாறு சிரமப்பட்ட சில மாணவர்களுக்கு நாங்கள் வெற்றிகரமாக உதவினோம். இதன் விளைவாக, முந்தைய ஆண்டை விட எஸ்.பி.எம் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது," என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.