கோலாலம்பூர், மே 28 (பெர்னாமா) -- 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் (ஏசிசி) போட்டியின் இறுதி ஆட்டத்தில் பூரிராம் யுனைடெட் எஃப்சி அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது குழு அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாகத் திரும்பும் என்று சிலாங்கூர் எஃப்சி பயிற்றுவிப்பாளர் கிம் பான் கோன் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்காத நிலையில், நேற்றிரவு பூரிராம் அரங்கில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றதால், ரெட் ஜெயண்ட்ஸ் படை மொத்தத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
"நாங்கள் அணியின் குணாதிசயத்தையும் டி.என்.ஏ-வையும் மறுமதிப்பீடு செய்துள்ளோம். அடுத்த பருவத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்."
"நாங்கள் வலுவாக மீண்டு வருவோம். நாங்கள் எழுச்சி பெற்று எங்கள் நிலைக்குத் திரும்புவோம்," என்று கூறிய அவர், சிலாங்கூர் அணி சூப்பர் லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கத் தவறியது குறித்து சற்று ஏமாற்றம் அடைந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் ஏசிசி-யின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் கருத்துரைத்தார்.
சிலாங்கூர் எஃப்சி, சூப்பர் லீக் போட்டியில் ஜோகூர் டாருல் தாசிம் (ஜே.டி.டி) மற்றும் இரண்டாம் இடம் பிடித்த கூச்சிங் சிட்டி ஆகிய அணிகளுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
கடந்த ஜனவரி மாதம், பருவத்தின் நடுப்பகுதியில் சிலாங்கூர் அணியில் இணைந்த தென் கொரியாவைச் சேர்ந்த அந்தப் பயிற்றுவிப்பாளர், ஏசிசி போட்டி, கோப்பையை வெல்லத் தவறினாலும், அணியின் ஆட்ட அடையாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சாதகமான தளமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
"நான் பருவத்தின் நடுவில் வந்தேன். நாங்கள் ஷோப்பி கிண்ணத்தில் (ஏசிசி) விளையாடியபோது, நாங்கள் எப்போதும் சிறந்த செயல்திறனைக் காட்டினோம். இந்தத் தொடரின் மூலம் ஒரு ஆட்டத்தின் வழியாக அணியின் குணாதிசயத்தை உருவாக்க முயன்றோம்."
"இறுதிப் போட்டியில் நாங்கள் மிகவும் கடினமான எதிரியை எதிர்கொண்டோம், ஆனாலும் எங்கள் ஆட்டத்தின் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தோம்," என்று அவர் கூறினார்.
நேற்றிரவு நடந்த ஆட்டத்தில், 18-வது நிமிடத்தில் முஹமட் ஷாஹிர் பாஷா கோல் அடித்து சிலாங்கூரின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பினார். இருப்பினும், பூரிராம் யுனைடெட் அணி 27-வது நிமிடத்தில் சுப்ஹானட் முயன்டா மூலமும், 55-வது நிமிடத்தில் தீரத்தோன் புன்மாதன் மூலமும் கோல்களை அடித்து, தங்களின் வட்டார அளவிலான பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
முதல் ஆட்டத்தின் போது வீரர்களிடையே இருந்த பதற்றம், ரெட் ஜெயண்ட்ஸ் அணியின் மொத்த தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக பான் கோன் ஒப்புக்கொண்டார்.
"சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில், நீண்ட காலமாக இறுதிப் போட்டிகளில் விளையாடாததால், வீரர்கள் இறுதிப் போட்டிக்கு பழகவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் சற்று பதற்றமாக இருந்தனர்."
"எங்கள் ரசிகர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதால், வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்த நாங்கள் ஊக்குவித்தோம். அது பலனளித்தது. அந்நிய மண்ணில் விளையாடிய போதிலும், நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். இவ்வளவு வலிமையான அணிக்கு எதிராக எங்கள் ஆட்டத்தின் அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொண்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் மேலும் கூறினார் .
அடுத்தப் பருவத்தில் சிலாங்கூர் நிச்சயம் வலுப்பெறும் - பான் கோன்
28 மே 2026, 6:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
வகைsukankini
உங்கள் கருத்து என்ன?




