கூச்சிங், மே 28: ஹரி காவாய் கொண்டாட்டங்களின் உற்சாகத்திற்கு மத்தியிலும், சரவாக்கில் உள்ள டாயாக் சமூகம் நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
சரவாக் பாரம்பரிய சுங்க மன்றத்தின் (Majlis Adat Istiadat Sarawak) முன்னாள் ஆராய்ச்சி உதவியாளரான பிலிப் இகாய் இதுகுறித்து கூறுகையில், 1960 முதல் 1980-ஆம் ஆண்டுகள் வரை பாரம்பரிய சடங்குகளுக்கும் பழக்க- வழக்கங்களுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப் பட்ட நிலையில், தற்போதைய காவாய் கொண்டாட்டங்கள் பெருமளவு மாறி விட்டன என்றார்.
டாயாக் சமூகத்தினரிடையே, குறிப்பாகப் பலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு ஏற்பட்ட மத நம்பிக்கை மாற்றங்களே பாரம்பரிய சடங்குகள் குறைந்து போனதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்."கடந்த காலங்களில், முதியோர்களின் பங்கேற்புடன் காவாய் உமாய் (Gawai Umai), காவாய் துவா (Gawai Tuah) போன்ற பல்வேறு பாரம்பரிய சடங்குகள் அதிகளவில் நடைபெற்றன.
சடங்குகளை முன்னின்று நடத்துவதில் முதியோர்கள் முக்கியப் பங்காற்றினர். ஆனால், இன்று பெரும்பாலான பாரம்பரிய சடங்குகள் மிகவும் அரிதாகிவிட்டன, கிட்டத்தட்ட அவை நடத்தப்படுவதே இல்லை," என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
76 வயதான அந்த முன்னாள் ஆசிரியர் மேலும் கூறுகையில், இளைய தலைமுறையினரை ஈர்ப்பதற்காகவும் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் நீண்ட வீடுகளில் (Rumah Panjang) உள்ள காவாய் கொண்டாட்டக் குழுவினர், இளைஞர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.
செபாக் தக்ரோ, புட்சால் போன்ற விளையாட்டுப் போட்டிகளும், கரோக்கே போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இப்போது கொண்டாட்டங்களில் முக்கிய அங்கம் வகிக்கின்றன."இருப்பினும், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடரவே செய்கின்றன. உதாரணமாக, பெத்தோங் (Betong) பகுதியில் உள்ள சில மன்றங்கள் மற்றும் சங்கங்கள் இளைய தலைமுறையினருக்குப் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன," என்று அவர் கூறினார்.
பாரம்பரியக் கூறுகள் குறைந்து வந்தாலும், ஜூன் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கொண்டாடப்படும் ஹரி காவாய், சரவாக்கில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட டாயாக் பழங்குடி இன மக்களின் அடையாளமாகத் தொடர்ந்து விளங்குவதாக பிலிப் கூறினார்.
காவாய் பண்டிகையை தேசிய அளவிலான கொண்டாட்டமாக மாற்றும் முயற்சிகள் 1960-களின் தொடக்கத்திலேயே டத்தோஸ்ரீ ட்ரா ஜெண்டர் (Datuk Seri Tra Zehnder) போன்ற தலைவர்களால் முன்னெடுக்கப் பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கு முன்பு, டாயாக் மக்கள் தங்களின் அறுவடைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தங்கள் இனத்திற்கு ஏற்ப பல்வேறு காவாய் பண்டிகைகளைக் கொண்டாடினர். ஆனால், அதற்கான தேதிகள் இடத்திற்கு இடம் மாறுபட்டன."1963-இல் மலேசியா உருவான பிறகு, சரவாக்கின் முதல் முதலமைச்சர் டான்ஸ்ரீ ஸ்டீபன் கலோங் நிங்கான் (Tan Sri Stephen Kalong Ningkan) இப்பண்டிகையை அரசிதழில் வெளியிட ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 1965-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹரி காவாய் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது," என்று அவர் விவரித்தார். உண்மையான காவாய் கொண்டாட்டம் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கினாலும், நீண்ட வீடுகளில் குழுக்களை அமைத்து பணிகளைப் பகிர்ந்தளி-ப்பதற்கான சிறப்பு கூட்டங்கள் மூலமாக அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கிவிடும் என்று பிலிப் கூறினார்.
"பொதுவாக மே 30-ஆம் தேதியே, கோழிகளை அறுத்தல், லெமாங் (Lemang) சமைத்தல் மற்றும் பல்வேறு பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பது போன்ற ஏற்பாடுகள் தொடங்கிவிடும்."மே 31-ஆம் தேதி காலையில், நீண்ட வீடுகளில் வசிப்பவர்கள் உண்மையான காவாய் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் 'ருவாய்' (Ruai - நீண்ட வீட்டின் பொது வராண்டா) பகுதியில் பாய்களை விரிப்பார்கள்.
சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளுக்கும் சென்று வருவார்கள்," என்றார் அவர்.
மே 31-ஆம் தேதி இரவில், நீண்ட வீடுகளில் வசிப்பவர்கள் காவாய் கொண்டாட்ட சடங்குகளுக்காக ருவாயில் கூடுவார்கள். அப்போது 'கெண்டாங் ராயா' (gendang rayah) எனப்படும் சிறப்பு முரசு இசைக்கப்படும்.
"ஒவ்வொரு அறையையும் பிரதிநிதிக்கும் நபர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பாரம்பரியத்தின் அடையாளமாகப் வாள் ஏந்தியபடி(Parang) கத்தியை ருவாயைச் சுற்றி வரும் 'பெராயா' (berayah) நிகழ்வும் நடைபெறும்.
"நள்ளிரவு நெருங்கும் வேளையில், காவாய் தலைவர் உரையாற்றுவார். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு (ஜூன் 1), காவாய் புத்தாண்டு தொடங்குவதைக் குறிக்கும் வகையில் நீண்ட வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் 'ஆயர் பெங்காயு' (air pengayu) எனப்படும் நீரை அருந்துவார்கள்.
மேலும், கடந்த காலத் தவறுகளை மன்னிக்கும் அடையாளமாக ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்," என்று பிலிப் இகாய் விவரித்தார்.



