ஷா ஆலம், 28 மே: 2021 முதல் 2026 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் ஏழு இஸ்லாமிய வழித்தவறிய போதனைகள் என அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூர் முஃப்தி துறையின் ஃபத்வா (Fatwa) பிரிவின் தலைவர் கூறுகையில், சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) மற்றும் பல்வேறு தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நேர்காணல்கள் மற்றும் விசாரணைகளை இந்த நடைமுறை உள்ளடக்கியுள்ளது என்றார்.
அவர்களின் கண்ணோட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட பின்னரே ஆய்வறிக்கைகள் தயாரிக்கப் படுகின்றன என்றும், அஹ்லி சுன்னா வல்ஜமாஅத் (Ahli Sunnah Waljamaah) கூறுகளுடன் அவை ஒப்பிடப்படுகின்றன என்றும் முகமட் சுக்ரி சுலைமான் விளக்கினார்.
"அவற்றில் முரண்பாடுகள் இருந்தால், ஃபத்வா குழு கூட்டத்தில் நாங்கள் முடிவெடுப்போம். இது வெறும் புகார்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக மிகவும் நுணுக்கமான விசாரணைகளின் அடிப்படையிலானது" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
ஒரு போதனை நாடு முழுவதும் பரவியிருந்தால், மாநில ஃபத்வா குழுவின் முஸாகராவில் ஒருங்கிணைக்கப் படுவதற்கு முன்பு, அந்த விவகாரம் தேசிய ஃபத்வா முஸாகராவிற்கு (Muzakarah) கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்.
ஒரு போதனை வழித் தவறியது என அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதன் பின்பற்றுபவர்களுக்கு சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (MAIS) மூலம் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அகீதா (நம்பிக்கை) மறுவாழ்வுத் திட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"எனவே, மறுவாழ்வு என்பது ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. சிலர் விரைவாக மாறுவர், சிலர் தாமதமாவர். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே வருபவர்களும் உள்ளனர், ஆனால் இது கடினமானதல்ல. சமய வகுப்புகளில் கலந்துகொள்வதைப் போன்றதே," என்று அவர் கூறினார்.
முகமட் சுக்ரியின் கூற்றுப்படி, சிலர் விரைவாக குணமடைந்தாலும், மறுவாழ்வு செயல்முறையை மேற்கொண்ட பின்னரும் தங்களின் அசல் குழுக்களுக்கே திரும்பிச் செல்பவர்களும் உள்ளனர்.
இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தில் வழித் தவறியவை என அரசிதழில் பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள், சமூக ஊடக தளங்கள் வாயிலாக வெளி நாடுகளில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக இஸ்தின்பாட் பிரிவின் உதவி முஃப்தி நூர் அத்திகா சுலைமான் தெரிவித்தார்.
"வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பின்னரும் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படும் வழக்குகளும் உள்ளன. இதுபோன்ற விவகாரங்களில், அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது சற்றே கடினமானதாகும்," என்று அவர் கூறினார்.
ஃபத்வா பிரிவின் மூத்த உதவி முஃப்தி அப்துல் வாஹிட் இஷாக் கூறுகையில், சமூக ஊடகங்கள் உட்பட எந்தவொரு தளத்திலும் வழிகெட்ட சித்தாந்தங்களைப் பரப்பும் தலைவர்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் தனிநபர்கள் மீது தண்டனை விதிக்கப்படலாம் என்றார்.
"சில நேரங்களில், அக்குழுவின் உறுப்பினர் அல்லது தலைவர் அல்லாதவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் தகவல்கள், ஏதேனும் ஒரு வழிகெட்ட போதனையை ஆதரிக்கும் வகையில் அமைந்திருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்," என்று அவர் கூறினார்.
சமூக ஊடக அமலாக்க விவகாரங்களில் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (SKMM) ஈடுபட்டுள்ளது. இருப்பினும், முடக்கப்பட்டாலும் அக்குழுவினர் மீண்டும் புதிய கணக்குகளைத் திறக்க முடிவதால் இம்முயற்சி பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.



