சிலாங்கூர் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு சுல்தானின் ஒப்புதலுக்காக காத்திருப்பு; RS-2 திட்ட அறிக்கை தாக்கல் செய்வதில் கவனம் செலுத்தும்

26 மே 2026, 1:58 AM
சிலாங்கூர் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு சுல்தானின் ஒப்புதலுக்காக காத்திருப்பு; RS-2 திட்ட அறிக்கை தாக்கல் செய்வதில் கவனம் செலுத்தும்

கோலா சிலாங்கூர், மே 26: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநிலத்தின் மேம்பாடு கட்டமைப்பான இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) திசையை விவாதிப்பதற்காக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (DUN) சிறப்புக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு முன், மாண்புமிகு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருப்பதாக சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DNS) சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்தார்.

வரும் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து டத்தோ மந்திரி புசார் அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு முறையான அறிவிப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

"ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிலாங்கூர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான அறிவிப்பை மந்திரி புசார் அலுவலகத்திலிருந்து நான் பெற்றுள்ளேன்."

"இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக, சட்டமன்ற அலுவலகம் சிலாங்கூர் சுல்தான் அலுவலகத்திற்கு தகவலைத் தெரிவித்துள்ளது," என்று அவர் விளக்கினார்.

ஏஜென்சிகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் துணை நிறுவனங்களுக்கான தேர்வுக் குழுவுடன் (JP-ABAS) இணைந்து, ஜெராம் 1 கழிவிலிருந்து ஆற்றல் (Waste-to-Energy) ஆலைக்கு மேற்கொண்ட வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அவரது கூற்றுப்படி, இந்தச் சிறப்புக் கூட்டம் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியால் தாக்கல் செய்யப்படவுள்ள RS-2 திட்டத்தின் மீது முக்கிய கவனம் செலுத்தும். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதன் மீது விவாதங்களை மேற்கொள்வார்கள்.

"மந்திரி புசாரால் தாக்கல் செய்யப்படவுள்ள RS-2 குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் தாக்கல் செய்யப்பட்ட விஷயங்களைச் சுற்றியே அமையும்."

"முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் நிச்சயமாக விவாதிக்கப் பட்டு, அவை RS-2 திட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப் படும்," என்று அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட தற்போதைய சவால்களைக் கருத்தில் கொண்டு இந்த RS-2 திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளதாக மந்திரி புசார் அமிருடின் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் தொடர்ந்து போட்டித் தன்மையுடனும் நிலையான வளர்ச்சியுடனும் இருப்பதை உறுதிசெய்ய, மேலும் வலுவான மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைக்க கூடிய புதிய அணுகுமுறை தேவை என்று அவர் கூறியிருந்தார்.

பிரபல பொருளாதார நிபுணர் மரியானா மஸுகாட்டோவின் முக்கிய அணுகு முறைகளில் ஒன்றான 'இலக்கு சார்ந்த மேம்பாட்டு மாதிரி' (mission-oriented development model), இந்த RS-2 திட்டத்தில் முன்னிலைப்படுத்தப் படும் அணுகுமுறைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அமிருடின் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.