FSO செப்பாட் விபத்து: காரணம் குறித்து காவல்துறை விரிவான விசாரணை

25 மே 2026, 7:19 AM
FSO செப்பாட் விபத்து: காரணம் குறித்து காவல்துறை விரிவான விசாரணை

கோலா திரங்கானு, மே 25 – கோல திரங்கானு கடற்பரப்பில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள FSO செப்பாட் மிதக்கும் சேமிப்பு மற்றும் இறக்குதல் தளத்தில் நேற்று மதியம் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டுள்ளதாக கோலா திரங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர், ஏசிபி அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.

எனவே, இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில், உறுதிப்படுத்தப் படாத தகவல்களைப் பரப்புவதையும் ஊகங்களை வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

"தற்போது இந்த வழக்கு 'திடீர் மரண அறிக்கை'யின் கீழ் விசாரிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும், சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.

"விசாரணையில் ஏதேனும் குற்றவியல் கூறுகள் கண்டறியப்பட்டால், இந்த வழக்கு மீண்டும் வகைப் படுத்தப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப் படும்," என்று இன்று சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் மருத்துவத் துறையில் சந்தித்தபோது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்றைய சம்பவத்தில், எண்ணெய் தளத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிலாளர்கள் பயணித்த மீட்புப் படகு கடலில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.