ஆன்லைன் வாகன உரிமை மாற்றுச் சேவைகள் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தம் - ஜேபிஜே தலைமை இயக்குநர்

25 மே 2026, 2:08 AM
ஆன்லைன் வாகன உரிமை மாற்றுச் சேவைகள் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தம் - ஜேபிஜே தலைமை இயக்குநர்

கோலாலம்பூர், மே 25 - சாலைப் போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே), அனைத்து ஆன்லைன் வாகன உரிமை மாற்று (THM) பரிவர்த்தனைகளும் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப் படுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுத்தம் பொது இணையதளம், கியோஸ்க், மற்றும் ஜேபிஜே-யின் வர்த்தகப் பங்காளிகளான MyEG மற்றும் eAuto Sdn Bhd உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தளங்களுக்கும் பொருந்தும்.

பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அறிவுக்கு எட்டாமல் வாகன உரிமை மாற்றங்கள் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாகவும் சமூக ஊடகங்களிலும் பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"ஜேபிஜே அமைப்பில் உள்ள வாகனப் பதிவுப் பதிவேடுகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தை ஜேபிஜே மிகவும் தீவிரமாகக் கருதுகிறது."

"எனவே, நாளை (மே 25) முதல், தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான அனைத்து வாகன உரிமை மாற்று நடவடிக்கைகளும் ஜேபிஜே அலுவலகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

தனிநபர் பிரிவினருக்கான பரிவர்த்தனைகள் அனைத்து மாநில மற்றும் கிளை ஜேபிஜே அலுவலகங்களிலும் ஒரே நாளில் முடிக்கப் படலாம் என்றும் அவர் கூறினார்.

"தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் ஏழு வேலை நாட்களுக்குள் சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்," என்றார்.

இதற்கிடையில், eAuto சேவை வழங்குபவர்களை பொறுத்தவரை, தற்காலிக உரிமை மாற்று முறை (STMS) பரிவர்த்தனைகள் மட்டுமே வழக்கம் போல் செயல்படும் என ஏடி ஃபட்லி தெரிவித்தார்.

இருப்பினும், eSerahan Tukar Milik (eSTM) மூலமான நிரந்தர உரிமை மாற்று முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார் நிறுவனங்கள் உட்பட, இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் மாநில அல்லது கிளை ஜேபிஜே அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

"வாகன உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், துறையின் சேவை வழங்கல் அமைப்பின் நேர்மையை உறுதிப்படுத்தவும், ஜேபிஜே அமைப்பில் உள்ள வாகனப் பதிவுப் பதிவேடுகளின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு அவ்வப்போது பலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப் படுவதை ஜேபிஜே உறுதி செய்யும்," என்றார்.

பொதுமக்கள் தங்கள் வாகனங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களையும் தரவுகளையும் ஜேபிஜே-யிடம் அவ்வப்போது சரிபார்த்துப் புதுப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.