அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் ராஜினாமா

23 மே 2026, 1:05 PM
அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட்  ராஜினாமா

வாஷிங்டன், மே 23: தன் கணவருக்கு ஏற்பட்ட அரிய வகை எலும்புப் புற்றுநோய் காரணமாக, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வதாக துளசி கப்பார்ட் அறிவித்துள்ளார் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.

"இந்தக் கடினமான சோதனைக் காலத்தில் தன் கணவருடன் இருந்து அவருக்கு முழு ஆதரவை வழங்குவதற்காக, பொதுச்சேவையிலிருந்து
விலக வேண்டியுள்ளது" என்று அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கப்பார்ட் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் வெள்ளிக்கிழமையன்று அவரது உதவியாளர் ஒருவரால் வெளியிடப்பட்டது.

அவர் தனது பதவியை ஜூன் 30-ஆம் தேதியுடன் ராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறினார்.

தேசிய உளவுத்துறை இயக்குநராக, கப்பார்ட் அமெரிக்க உளவுத்துறையைக் கண்காணித்து வந்ததுடன், உளவுத்துறை விவகாரங்களில் அதிபரின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார். 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது அவர் இந்தப் பொறுப்பை ஏற்றார்.

கப்பார்ட் தனது கடமையை "மிகச் சிறப்பாகச் செய்துள்ளார், அவரை நாங்கள் மிஸ் செய்வோம்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது துணை இயக்குநரான ஆரோன் லூகாஸ் இந்தப் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்பார் என்று ட்ரம்ப் கூறினார்.

ஹவாயைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான கப்பார்ட், பின்னர் ஒரு சுயேச்சை அரசியல்வாதியாக மாறினார். அதன் பிறகு 2024-ல் ட்ரம்பிற்கு ஆதரவளித்து குடியரசுக் கட்சியில் இணைந்தார்.

உளவுத்துறையின் உயரிய பதவியில் அவரை ட்ரம்ப் நியமித்த முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உக்ரைன் போர் தொடர்பான ரஷ்யாவின் வாதங்களைத் திரும்பத் திரும்பக் கூறியதற்காகவும், தவறான தகவல்களைப் பரப்பியதற்காகவும் கப்பார்ட் முன்னதாக விமர்சிக்கப்
பட்டார்.

2017-ஆம் ஆண்டில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அப்போதைய சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்தை சந்தித்ததும் பலரது கவனத்தை ஈர்த்தது.

ட்ரம்ப் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பு, கப்பார்ட் வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டை கடுமையாக எதிர்ப்பவராக அறியப்பட்டார்.

சமீபத்திய வாரங்களில், ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் குறித்து அவருக்கும் ட்ரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாக வெளிப்பட்டன. யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் கப்பார்ட் தன்னை விட மிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அதிபர் கூறியிருந்தார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா என்பது குறித்த அவரது நிலைப்பாட்டிற்காகவும் கப்பார்ட் சமீப மாதங்களில் உற்று நோக்கப்
படுகிறார். ட்ரம்ப் இந்த அச்சுறுத்தல் வாதத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டை நியாயப் படுத்தியிருந்தார்.

ஜூன் 2025-ல் நடந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் தனது அணுசக்தித் திறனை மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கவில்லை என்று நாடாளுமன்ற செனட் குழு ஒன்றிடம் எழுத்துப்
பூர்வமாக கப்பார்ட் கூறியதாக பிபிஎஸ் (PBS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற விசாரணையின் போது, ஈரான் உடனடி அச்சுறுத்தலாக உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கப்பார்ட் நேரடியான பதிலை அளிக்கவில்லை.

"எது உடனடி அச்சுறுத்தல் அல்லது எது அச்சுறுத்தல் இல்லை என்பதைத் தீர்மானிக்கக் கூடிய ஒரே நபர் அதிபர் மட்டுமே" என்று கப்பார்ட் கூறினார்.

-- பெர்னாமா-டிபிஏ

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.