கோலாலம்பூர், 23 மே -- மக்களுக்கு உயர்தர சிகிச்சையை வழங்குவதில் செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் (HSIS) பெருமைக்குரிய சாதனைக்காக, குறிப்பாக அதன் இதய சிகிச்சை மையக் குழுவினர் உட்பட மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நோயாளிகள் உட்பட ஒரு நாளைக்கு சுமார் 60 இதய நோயாளிகளைக் கையாளும் திறன், நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம், செயல்திறன் மற்றும் உயர் தயார் நிலையை நிரூபிக்கிறது என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
"ஒவ்வொரு உயிருக்கும் பெரும் மதிப்பளிக்கும் குழுவின் உயர் அர்ப்பணிப்பையும், நோயாளிகள் மிகவும் நெருக்கடியான நேரத்தில் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதில் இருதயவியல் துறையின் அயராத அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன்.
""அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவை மற்றும் தியாகங்களுக்கு நன்றி. இந்த சிறப்பான சேவையைத் தொடருங்கள்," என்று அவர் கூறினார்.மே 8, 2023 அன்று, செர்டாங் மருத்துவமனை HSIS என மறுபெயரிடப்பட்டது.
சுகாதார அமைச்சினால் (KKM) இருதயவியல் துறைக்கான சிறந்த மையமாக (COE) HSIS அங்கீகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து, இதய சிகிச்சை மையம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக நேற்று HSIS தெரிவித்தது.இந்த வெற்றியானது, நோயாளிகளுக்கு உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் இதய சிகிச்சையை வழங்குவதில் அந்த மையத்தின் உயர் திறன் மற்றும் அசாதாரண ஆற்றலை நிரூபிக்கிறது.
"நாட்டின் உயர் செயல்திறன் கொண்ட இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாக, HSIS தொடர்ந்து குறிப்பிடத்தக்க புள்ளி விவரங்களைப் பதிவு செய்துள்ளது. 2025-ஆம் ஆண்டு முழுவதும், இந்த மையம் 9,483 இதய ஆஞ்சியோகிராம் செயல்முறைகளையும், 6,486 பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (PCI) அல்லது இதய ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறைகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, அதிக பணிச்சுமையையும் வழங்கப்படும் சேவையின் மீது நோயாளிகள் வைத்துள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. "HSIS-இல் இருதயவியல் சேவை தொடர்ந்து வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைகளும், அவசர சிகிச்சைகள் குறிப்பாக கடுமையான மாரடைப்பு வழக்குகள் 24 மணி நேரமும் கையாளப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிகள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் முக்கியமான சிகிச்சையைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது," என்று HSIS கூறியது.
இந்தத் தீவிர நடவடிக்கைகளில் 15 இருதய நோய் நிபுணர்கள், ஆறு மருத்துவ அதிகாரிகள், 11 எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்கள், எட்டு உதவி மருத்துவ அதிகாரிகள் மற்றும் 40 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 80 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு, ஒவ்வொரு செயல் முறையும் சீராக நடைபெறுவதை உறுதி செய்கின்றனர்.-- பெர்னாமா





