வியாபாரிகளுக்கு உதவவும் அரசாங்க கடன் வசதிகள் குறித்து விளக்கமளிக்கவும் நிதி நிறுவனங்கள் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தல்
கோம்பாக், மே 23: சிறு வியாபாரிகள் அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் கடன் வசதிகளைப் பெறுவதற்கு ஏதுவாக, நிதி நிறுவனங்கள் அதிக முனைப்புடன் களமிறங்கி உதவ வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போது வழங்கப்படும் பல்வேறு கடன் மற்றும் நிதியுதவி வசதிகள் குறித்து குறு, சிறு வியாபாரிகள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும், அவற்றின் பலன்களை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
"அரசாங்கம் வழங்கும் கடன் வசதிகள் இன்னும் சென்றடைய வேண்டிய தரப்பினருக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதை கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் (KRI) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது," என அவர் குறிப்பிட்டார்.
"எனவே, தேசிய சேமிப்பு வங்கி (BSN), மாரா (MARA) மற்றும் அக்ரோபேங்க் (Agrobank) போன்ற நிதி நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வியாபாரிகளுக்காகக் காத்திருக்காமல், நேரடியாகக் களமிறங்கி இந்த நன்மைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நான் விவாதித்துள்ளேன்," என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள தாமான் மெலாவத்தி உழவர் சந்தையில் (Pasar Tani) 'அக்ரோபேங்க் மற்றும் ஃபாமா' (Agrobank x FAMA) விவசாய தொழில்முனைவோர் சிறப்புத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், தொழில்முனைவோர் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) முகமது நஜ்வான் ஹலிமி மற்றும் உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி ஆகியோரும் உடனிருந்தனர்.
நாடு முழுவதும் உள்ள 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பயனடையும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்காக 5 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான குறுங்கடன் வசதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் குறுந்தொழில்முனைவோருக்குத் தேவையான மூலதன ஆதரவை வழங்கும் நோக்கில், சில குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு 4 விழுக்காடு என்ற குறைந்த வட்டி விகிதத்தில் 100,000 ரிங்கிட் வரை இந்த வசதியின் வழி கடன் வழங்கப்படுவதாக அவர் விளக்கினார்.
இதற்கிடையே, உழவர் சந்தையில் வியாபாரிகளின் நிலை மற்றும் தேவைகளை நேரடியாகக் கண்டறிய பிரதமர் மற்றும் நிதியமைச்சகம் எடுத்த இந்த களப்பணி நடவடிக்கையை எக்ஸ்கோ முகமது நஜ்வான் ஹலிமி வரவேற்றார்.
பயிற்சிகள், நிதி உதவி மற்றும் சேவை ஆதரவு ஆகியவற்றின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கமும் வங்கி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
"மாநில அரசாங்க மட்டத்தில் சில வரம்புகள் உள்ளன என்பது உண்மையே. எனவே, தொழில்முனைவோருக்கு விரிவான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வதில் மத்திய அரசாங்கம் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
"அதே வேளையில், தொழில்முனைவோர் மேம்பாட்டை மிகவும் திறம்பட செயல்படுத்துவதற்காக கடன் வசதிகளைப் பெறுவது, பயிற்சி மற்றும் சேவைகளுக்கான ஆதரவு ஆகியவையும் இந்த முயற்சியில் அடங்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
வியாபாரிகளுக்கு உதவ அரசாங்க கடன் வசதிகள் குறித்து விளக்க நிதி நிறுவனங்கள் களமிறங்க வேண்டும்
23 மே 2026, 5:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




