சிரம்பான், மே 21 - இங்குள்ள பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை 7 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பாரமரிப்பாளருக்கு மே 25-ஆம் தேதி வரை ஆறு நாள் விளக்கமறியல் விசாரணையில் வைக்கப்பட்டர்.
38 வயதுடைய அப்பெண்ணின் மீதான விளக்கமறியல் நேற்றுத் தொடங்கியதாகவும், அவர் மீதான விசாரணை 2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் மேற்கொள்ளப் படுவதாகவும் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
"சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்று அவர் இன்று இங்கு பெர்னாமாவிடம் கூறினார்.
பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள அப்பராமரிப்பாளரின் வீட்டில் அவரது பாதுகாப்பில் இருந்த போது சம்பந்தப்பட்ட குழந்தை சுயநினைவை இழந்ததாக நம்பப்படுவதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அக்குழந்தை அருகிலுள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அங்கு மேற்கொள்ளப்பட்ட இதயத் துடிப்பு முடுக்க (CPR) முயற்சி பலனளிக்காமல் அக்குழந்தை உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவத்தின் போது, அக்குழந்தை தொட்டிலில் தூங்க வைக்கப் பட்டிருந்ததாகவும், அதற்கு சிலிக்கான் வகையிலான சூப்புக்குழல் (puting) வழங்கப் பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட குழந்தை பராமரிப்பு மையம் பதிவு செய்யப்படவில்லை என்பதோடு, 1984-ஆம் ஆண்டு குழந்தை காப்பகச் சட்டத்தின் கீழ் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக நெகிரி செம்பிலான் சமூக நல இலாகாவின் (JKM) இயக்குநர் முகமட் யூஸ்ரி சே டா தெரிவித்தார்.
“ஆரம்பக் கட்ட அறிக்கையின்படி, அப்பெண்ணின் பராமரிப்பில் மேலும் சில குழந்தைகள் இருந்துள்ளனர். அந்த வீட்டைத் தொடர்ந்து காப்பகமாகச் செயல்பட வேண்டாம் என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்... குழந்தைகள் இறப்பு அல்லது காயம் தொடர்பான பெரும்பாலான சம்பவங்கள், பதிவு செய்யப்படாத பராமரிப்பாளர்களின் வீடுகளிலும் காப்பகங்களிலுமே நிகழ்கின்றன,” என்று அவர் கூறினார்.
எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் முறையான விதிமுறைகளின்படி பராமரிக்கப் படுவதையும், பாதுகாக்கப் படுவதையும் உறுதிசெய்ய எப்போதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"பதிவு செய்யப்பட்ட காப்பகங்களுக்கு குழந்தைகளை அனுப்புவது குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். ஏனெனில், அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் JKM மட்டுமின்றி தீயணைப்புத் துறை, உள்ளாட்சி மன்றம் மற்றும் பிற தரப்பினராலும் முறையான பாதுகாப்புப் பரிசோதனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப் பட்டிருக்கும்.
“கட்டணம் குறைவாக உள்ளது என்பதை மட்டும் பார்க்க வேண்டாம், ஏனெனில் இது குழந்தைகளின் உயிரோடு சம்பந்தப் பட்டது. பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் ஆரம்பத்திலிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் முறைகள் மற்றும் அவசரகால சூழ் நிலைகளைக் கையாளும் விதம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, இம்மாநிலத்தில் இலவசமாக வழங்கப்படும் 'அசுஹான் பெர்மாத்தா' (Asuhan Permata) பயிற்சியில் பராமரிப்பாளர்கள் அல்லது குழந்தை காப்பகப் பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முகமட் யூஸ்ரி கேட்டுக்கொண்டார்.
-- பெர்னாமா
குழந்தை உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு உதவ பராமரிப்பாளருக்கு 6 நாள் விளக்கமறியல் விசாரணை
21 மே 2026, 8:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






