மலேசியா இப்போது உலகின் 7 வது மிகவும் நம்பகமான நாடு; மக்களின் நம்பிக்கை குறியீடு அதிகரிப்பு

21 மே 2026, 2:57 AM
மலேசியா இப்போது உலகின் 7 வது மிகவும் நம்பகமான நாடு; மக்களின் நம்பிக்கை குறியீடு அதிகரிப்பு

ஷா ஆலம், மே 21: 2026-ஆம் ஆண்டிற்கான எடெல்மேன் நம்பிக்கை அளவுகோலின்படி (Edelman Trust Barometer 2026), மதிப்பாய்வு செய்யப்பட்ட 28 உலகளாவிய சந்தைகளில் மலேசியா 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 66 புள்ளிகளாக இருந்த மலேசியாவின் நம்பிக்கை குறியீடு (Trust Index) இவ்வாண்டு 71 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் நம்பகமான நாடுகளில் ஒன்றாக மலேசியா தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

இருப்பினும், இந்த அதிகரிப்புக்கு மத்தியிலும், வேறுபட்ட கருத்துகள், பின்னணிகள் மற்றும் தகவல் ஆதாரங்களைக் கொண்ட தனிநபர்களை நம்புவதில் மக்களுக்கு ஏற்படும் தயக்கம் உள்ளிட்ட சமூக அளவிலான புதிய சவால்களையும் இந்த ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.

எடெல்மேன் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், தென்கிழக்கு ஆசியாவிற்கான மூத்த ஆலோசகருமான மஸுயின் ஜின் கூறுகையில், நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மீது அதிக நம்பிக்கையை வளர்ப்பதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், வெவ்வேறு சமூகக் குழுக்களிடையே இந்த நம்பிக்கையை விரிவுபடுத்துவது தான் அடுத்த கட்ட சவாலாக உள்ளது என்றார்.

பிஎச் ஆன்லைன் (BH Online) செய்தியறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், தற்போதுள்ள நம்பிக்கையானது ஒரே மாதிரியான விழுமியங்கள், சமூகம் மற்றும் தகவல் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் குழுக்களிடையே மட்டுமே அதிகமாகக் காணப்படுகிறது என்றார்.

"சமூகத்தில் உள்ள இடைவெளி மேலும் அதிகரித்தால், மலேசியாவால் இந்த உயர் மட்ட நம்பிக்கையைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. சமூக ரீதியாக மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதி செய்யவும் இந்த இடைவெளியைக் குறைப்பது மிகவும் முக்கியமாகும். அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைப்பதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது," என்று நேற்று இங்கு நடைபெற்ற எடெல்மேன் டிரஸ்ட் பரோமீட்டர் மலேசியா 2026 வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மலேசியப் பத்திரிகை நிறுவனத்தின் (MPI) தலைவர் டத்தோ யோங் சூ ஹியோங்கும் கலந்து கொண்டார்.

இந்த அறிக்கையின்படி, 87 விழுக்காட்டு மலேசியர்கள், தங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட தனிநபர்களை நம்பாத நிலை தற்போது சமூகத்தில் அதிகரித்து வருவதாக நம்புகின்றனர். இது ஆய்வு செய்யப்பட்ட அனைத்து நாடுகளையும் விட அதிகபட்ச அளவாகும்.

சமூகப் பார்வைகள், மதிப்புகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட நபர்களை நம்பத் தயங்கும் அல்லது சந்தேகிக்கும் 'குறுகிய நம்பிக்கை மனப்பான்மையை' (insular trust mindset) 65 விழுக்காடு மலேசியர்கள் கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களுக்கு முரணான அரசியல் நிலைப்பாடு கொண்ட தகவல் ஆதாரங்களிலிருந்து செய்திகளைப் பெறுபவர்கள் வெறும் 37 விழுக்காடு மலேசியர்கள் மட்டுமே ஆவர்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இன்று இருப்பதை விட அடுத்த தலைமுறையினர் சிறந்த வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்று 39 விழுக்காடு மக்கள் மட்டுமே நம்புகின்றனர். இது கடந்த ஆண்டை விட ஏழு புள்ளிகள் வீழ்ச்சியாகும்.

அதேவேளையில், போலித் தகவல்கள் அச்சுறுத்தல் குறித்த கவலையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பிரிவினையைத் தூண்டும் நோக்கில், உள்ளூர் ஊடகங்களில் அந்நியத் தரப்பினர் வேண்டுமென்றே போலித் தகவல்களைப் பரப்புவதாக 73 விழுக்காட்டுப் பதிலளித்தவர்கள் நம்புகின்றனர். இது ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு (UAE) அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது அதிகபட்ச அளவாகும்.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, வணிகத் துறை 76 விழுக்காடுடன் மிக உயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசாங்கம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO) தலா 72 விழுக்காட்டையும், ஊடகங்கள் 65 விழுக்காட்டையும் பெற்றுள்ளன. முதலாளிகள் மீது ஊழியர்கள் வைத்துள்ள நம்பிக்கை 82 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் "நம்பகமானவை" (trusted) என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்தச் சாதனை, முதலீட்டு நம்பிக்கையையும் நாட்டின் நிறுவனங்களின் நம்பகத் தன்மையையும் வலுப்படுத்துவதில் மலேசியா அடைந்துள்ள மாபெரும் வெற்றியைக் காட்டுகிறது என்று மஸுயின் கூறினார்.

"உலகில் மிகவும் நம்பகமான நாடுகளில் ஒன்றாக மலேசியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நம்பிக்கை என்பது பெறுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறிவரும் இன்றைய உலகில், முதலீட்டு நம்பிக்கைக்கும், நிறுவனங்களின் நம்பகத் தன்மைக்கும் இது ஒரு உண்மையான மற்றும் முக்கியமான சாதனையாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நாட்டின் நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையின் மீது மலேசியர்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையானது, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய சொத்தாக அமைகிறது என்று சூ ஹியோங் விவரித்தார்.

மலேசியாவில் வணிகத் துறையின் மீதான நம்பிக்கை உலகிலேயே மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாக இருப்பதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில வளர்ந்த பொருளாதார நாடுகளையும் அது முறியடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"நம் நாட்டில் வணிகத் துறையின் மீதான நம்பிக்கை 76 விழுக்காடு என்ற அளவில் மிகவும் வலுவாக உள்ளது. இது உலகில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும். மதிப்பு மற்றும் நிலைத் தன்மையைக் கொண்டுவருவதற்கு நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் தொழில் முனைவோரின் திறனை மக்கள் நம்புவதால் இது மிக முக்கியமான அடித்தளமாகும்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் சிக்கல்கள் மற்றும் இனம், மதம் சார்ந்த உணர்வுகளைத் தூண்டும் சில தரப்பினரின் நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

"அரசாங்கம், கல்வி, கார்ப்பரேட் அல்லது சமூகம் என எந்த மட்டத்திலும் சமூகத்தில் பிளவுகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அது சமூகத்தை ஒன்றிணைக்கும் பாலங்களை அழித்துவிடும் என்பதால் அது மிகவும் ஆபத்தானது," என்று அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளமை குறித்தும் சூ ஹியோங் கவலை தெரிவித்தார். இது ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றார்.

'ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட்' (Fear of missing out - FOMO) எனப்படும் ஒரு வித பதற்ற மனநிலையே இந்தத் தவறான தகவல்கள் பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இதனால் மக்கள் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கும் உள்நோக்கம் கொண்ட உள்ளடக்கங்களுக்கும் எளிதில் பலியாகிறார்கள் என்றார்.

"மக்களிடம் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசிகள் இருக்கும்போது, அவர்கள் இந்த FOMO மனநிலைக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாக, தனிப்பட்ட நோக்கம் கொண்டவர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய பல விசித்திரமான அறிக்கைகளை அவர்கள் வாசிக்கிறார்கள். இது நடக்கும்போது, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும்," என்று அவர் கூறினார்.

"நம்பிக்கையை வைத்திருப்பவர்களிலிருந்து நம்பகத்தன்மைக்கான தரகர்களாக: மலேசியாவின் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்" (From Trust Holders to Trust Brokers: What Malaysia's Institutions Must Do) என்ற தலைப்பிலான மன்றக் கலந்துரையாடலிலும் மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM) ஒலிபரப்புத் துறை தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில் கலந்து கொண்டார்.

மக்கள் நம்பகமான பிரதான ஊடகங்களை நாட வேண்டும் என வலியுறுத்திய சூ ஹியோங், மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஊடகத்துறை தொடர்ந்து தரமான இதழியல் மற்றும் பொறுப்பான செய்தியறிக்கைகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தவறான தகவல்கள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், உலகின் மிகவும் நம்பகமான நாடுகளில் ஒன்றாக மலேசியா தொடர்ந்து நீடிக்கிறது என்று அவர் கூறினார்.

நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை குறித்த இந்த வருடாந்திர ஆய்வானது, 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 18 வரை, மலேசியாவைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோர் உட்பட 28 உலகளாவிய சந்தைகளில் 33,938 பேரிடம் நடத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.