கடும் வெப்பம்: வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு மலேசிய ஹஜ் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

20 மே 2026, 4:23 AM
கடும் வெப்பம்: வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு மலேசிய ஹஜ் பயணிகளுக்கு அறிவுறுத்தல்
கடும் வெப்பம்: வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு மலேசிய ஹஜ் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

மக்கா, மே 20 - சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்ப வானிலையைத் தொடர்ந்து, மலேசிய ஹஜ் பயணிகள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அங்கு வெப்பநிலை விரைவில் 48 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் இந்த அறிவுரையை வழங்கினார். ஹஜ்ஜின் முக்கியக் கட்டமான மஷாயிர் புனிதப் பயணம் அதிக வெப்பநிலையில் நடைபெறவிருப்பதால் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானது என்றார்.

மஸ்ஜிதில் ஹராமுக்குச் செல்லும்போது கூரையிடப்பட்ட பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது குடைகளைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், உடலில் நீரிழப்பு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் பயணிகளுக்கு அறிவுறுத்தினார்.

"குறிப்பாக அரஃபாவில் வுகூஃப் அனுசரிப்பின் போது, அதிக வெப்பத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க, மஷாயிர் புனிதப் பயணத்தின் போது பயணிகள் கூடாரங்களிலேயே தங்கியிருக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசிய ஹஜ் மருத்துவக் குழுவினர் உயர் தயார் நிலையில் இருப்பதாகவும், ஹஜ் காலம் முழுவதும், குறிப்பாக மஷாயிர் செயல்பாடுகளின் போது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய சவூதி அரேபிய அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளதாகவும் சுல்கிஃப்லி கூறினார்.

நேற்று, சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம், மக்காவைச் சுற்றியுள்ள வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கடுமையான வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டது.

சவூதி அரேபிய அரசாங்கம் 1 சுல்ஹிஜ்ஜா 1447H-ஐ கடந்த திங்கட்கிழமை என நிர்ணயித்துள்ளது. ஹஜ்ஜின் உச்சகட்டமான அரஃபாவில் வுகூஃப் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.