சுகாதாரத் துறை: மலேசியா - சிங்கப்பூர் வியூக ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

20 மே 2026, 2:50 AM
சுகாதாரத் துறை: மலேசியா - சிங்கப்பூர் வியூக ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

கோலாலம்பூர், மே 20 – இரு நாட்டு மக்களின் நலனுக்காக உணவு லேபிளிங் கொள்கைகளை ஒருங்கிணைத்தல், மருத்துவ தொழில்நுட்பத்தை அணுகுதல் மற்றும் எல்லை தாண்டிய சுகாதாரச் சுற்றுலா உள்ளிட்ட சுகாதாரத் துறையில் மலேசியாவும் சிங்கப்பூரும் தங்களின் வியூக ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங்குடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் இந்த விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

"சுகாதாரத் துறையில் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான நெருங்கிய உறவு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் தொடர்ந்து வலுப்படுத்தப் படுகிறது. இது இரு நாட்டு மக்களின் நலனுக்காக உயர்ந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.

"இந்தச் சந்திப்பு, சமூகத்திற்கு நேரடிப் பயனைக் கொண்டு வரும் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியை வெளிப்படுத்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது, இப்பகுதியில் தொற்றா நோய்களை (NCD) எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு செயல்திட்டமாக, உணவு லேபிளிங் கொள்கையை (Nutri-Grade) ஒருங்கிணைப்பது குறித்தும் இரு நாடுகளும் விவாதித்ததாக அவர் கூறினார்.

உயர்தர மற்றும் புதுமையான மருத்துவ தொழில்நுட்பத்தை பிராந்திய சந்தையில் விரைவாக அணுகுவதற்கு உதவும் மருத்துவ சாதன ஒழுங்குமுறை சார்ந்த திட்டத்தை மலேசியா வரவேற்பதாகவும் சுல்கிஃப்லி கூறினார்.

ஜோகூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிங்கப்பூரிலிருந்து நோயாளிகளைப் பரிந்துரைக்கும் முயற்சிகள் மற்றும் மெடிசேவ் (Medisave) காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட, எல்லை தாண்டிய சுகாதாரச் சுற்றுலாவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"இது நிச்சயமாக நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார இணைப்பை மேம்படுத்தும்," என்றார் அவர்.

"சிக்கலான பொது சுகாதார சவால்களை உலகம் எதிர்கொள்ளும் வேளையில், இந்த ஒப்பந்தம் நட்புறவின் மரபைத் தொடர்வது மட்டுமல்லாமல், மேலும் நிலையான, நெகிழ்வான மற்றும் மனிதாபிமான பிராந்திய சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய கருவியாகவும் அமைகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியா பரஸ்பர மரியாதை மற்றும் செழிப்பை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர உறவுகளையும் ஒத்துழைப்பையும் நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.