பாங்காக், மே 15 — ஹாண்டா வைரஸ் தொற்றை “ஆபத்தான தொற்றுநோய்” என தாய்லாந்து அதிகாரப்பூர்வமாக வகைப் படுத்தியுள்ளது.
உலகளவில் இந்த வைரஸ் மற்றும் அதன் பரவல் அபாயம் குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அதிகாரிகள் தனிமைப் படுத்தல் மற்றும் கட்டாய கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு இந்த அறிவிப்பு அதிகாரம் அளிக்கிறது.
தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு குழுவான National Communicable Disease Committee (NCDC), இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இதில் Hantavirus Pulmonary Syndrome (HPS) மற்றும் Haemorrhagic Fever with Renal Syndrome (HFRS) ஆகிய இரு வகை ஹாண்டா வைரஸ் நோய்களும் அடங்கும்.
பொது சுகாதார நிரந்தர செயலாளர் Dr Somruk Chungsaman தெரிவித்ததாவது, கண்டறியப் படும் அனைத்து நோய்த் தொற்றுகளும் மூன்று மணி நேரத்திற்குள் அதிகாரிகளிடம் அறிவிக்கப் பட வேண்டும்.
மேலும், 12 மணி நேரத்திற்குள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும், அதிக ஆபத்து கொண்ட தொடர்பாளர்கள் 42 நாட்கள் வரை தனிமைப் படுத்தப்படலாம் என்றும் கூறினார். சுகாதார நிபுணர்களின் பரிந்துரை- களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும், சில ஹாண்டா வைரஸ் வகைகள் மனிதர்களிடையே பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், நோயின் தீவிர தன்மையாலும் இதை “ஆபத்தான தொற்றுநோய்” என வகைப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் விளக்கினார்.
“இந்த நோய் உலகளாவிய கவலைக்குரிய ஒன்றாகவும் உள்ளது.“வைரஸ் ஏற்படுத்தும் பொதுச் சுகாதார அபாய நிலைக்கு ஏற்ப, அதிகாரிகள் விரைவாகவும் பொருத்தமாகவும் செயல்படுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது,” என்று NCDC கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சுகாதார அமைச்சின் வரைவு அறிவிப்பின் கீழ், நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு விசாரணைகள் நடத்தவும், தனிமைப்படுத்தல் மற்றும் கட்டாய கண்காணிப்பு உத்தரவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவும் அதிகாரம் வழங்கப்படும்.
இது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. டாக்டர் சோம்ருக் கூறுகையில், ஹாண்டா வைரஸ் தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்று வலி, வாந்தி உணர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும் என்றார்.
கடுமையான நிலைகளில், நிமோனியா, சுவாச சிரமம், சிறுநீரக செயலிழப்பு, அதிர்ச்சி நிலை மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். எலிகள் போன்ற கொறிக்கும் விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது அதிக ஆபத்து உள்ள பகுதிகளுக்கு அண்மையில் பயணம் செய்தவர்கள், அதிக காய்ச்சல் அல்லது சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும், ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.




