ஷா ஆலாம், மே 9 — அரசின் நெகிழ்வான பணிமுறை அமைப்பின் கீழ், ஹவுஸ் ஆபிசர்கள் (இளநிலை மருத்துவ அதிகாரிகள்) வாரத்திற்கு 60 முதல் 62 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு (MOH) உத்தரவிட்டுள்ளது.
மே 8 தேதியிட்ட சுற்றறிக்கையில், மருத்துவமனை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், இந்த நடவடிக்கை மருத்துவ பட்டதாரிகளின் நலனையும் ஓய்வு நேரத்தையும் பாதுகாப்பதோடு, சுகாதார சேவைகள் தடையின்றி தொடரவும் தரமான மருத்துவப் பயிற்சி உறுதிப்படுத்தப்படவும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழ்வான பணிமுறை அமைப்பின் தரநிலைப்படுத்தல் குறித்த பொதுக் கொள்கை வழிகாட்டுதலின் விளக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Dr Mahathar Abu Wahab கூறுகையில், ஹவுஸ் ஆபிசர்களின் பணிநேரம் பொதுச் சேவை விதிமுறைகளும் தற்போதைய ஹவுஸ் ஆபிசர் திட்ட வழிகாட்டுதல்களும் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
“நெகிழ்வான பணிமுறை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, மருத்துவமனை இயக்குநர்கள் அதன் செயல்பாட்டை நெருக்கமாக கண்காணிப்பார்கள்,” என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக NST செய்தி வெளியிட்டது.
மேலும், மருத்துவமனைகள் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று ஷிப்ட் முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மருத்துவமனைகள் இந்த முறையை இரண்டு ஷிப்ட்களாக குறைக்கவோ அல்லது பழைய ‘on-call’ முறைக்கு திரும்பவோ அனுமதிக்கப்படமாட்டாது.”
பணியாளர் பற்றாக்குறையைப் பற்றி விளக்கிய அமைச்சு, ஹவுஸ் ஆபிசர்களின் நலனை பாதிக்காமல் மருத்துவ சேவைகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தது.
ஹவுஸ் ஆபிசர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், காலை பணியை ஏற்கனவே முடித்துள்ள ஹவுஸ் ஆபிசருக்கு பதிலாக, மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மாலை மற்றும் இரவு ஷிப்ட் பணிகளை ஏற்க வேண்டும் என்று MOH கூறியுள்ளது.
இளநிலை மருத்துவர்களின் நலனை பாதுகாத்தபடியே சுகாதார சேவையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக நேரங்களில் அதிகமான கற்றல் வாய்ப்புகளும் மருத்துவ அனுபவங்களும் கிடைக்கும் வகையில், ஹவுஸ் ஆபிசர்களின் பணிப்பட்டியலை மருத்துவமனைகள் திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“விடுப்பு உரிமையைப் பொறுத்தவரை, ஹவுஸ் ஆபிசர்களுக்கு வருடத்திற்கு 25 நாட்கள் ஆண்டு விடுப்பு வழங்கப்படும். இதற்கு மேலாக, மருத்துவ விடுப்பும் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும்,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.




