கோலாலம்பூர், மே 9 — பொதுப் போக்குவரத்து பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், வேகமான, தெளிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தகவல் சேவையை வழங்குவதற்காக, ரேபிட் கே.எல் தனது “Ask Me” பயணிகள் உதவி முயற்சியை பாசார் சினி பேருந்து மையத்தில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிக பயணிகள் நடமாட்டமும் பல்வேறு பேருந்து பாதை இணைப்புகளும் உள்ள பேருந்து மையங்களில், பயணிகள் எளிதில் தகவல் மற்றும் உதவி பெறுவதற்காக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப் பட்டதாக ரேபிட் கே.எல் தெரிவித்தது.
பேருந்து சேவை நிறுவனம் கூறுகையில், பயணிகள் உதவி பெறும் இடத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், “Ask Me” என்ற சிறப்பு தகவல் மேடை (podium) அந்த மையத்தில் அமைக்கப்படும்.
“பயணிகள் பேருந்து வழித்தடங்கள், நிறுத்த இடங்கள், பாதை மாற்றங்கள், பயண திட்டமிடல் மற்றும் பயண அட்டைப் பொருட்கள் (travel pass products) தொடர்பான தகவல்களைப் பெற முடியும். இது அவர்களின் அன்றாட பயணத்தை எளிதாக்க உதவும்.
“இந்த முயற்சி, முக்கிய போக்குவரத்து மையங்கள் மற்றும் மக்கள் அதிகம் திரளும் இடங்களில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர்களை முக்கிய பணியாளர்களாக கொண்டுள்ள ‘Service Ambassador 2.0’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரேபிட் பஸ் நிறுவனத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி கு ஜமில் ஜகாரியா கூறுகையில், “Ask Me” திட்டத்தின் அமலாக்கம், பொதுப் போக்குவரத்தை பயணிகளுக்கு மேலும் விரைவான பதிலளிப்பு கொண்டதும் நம்பகமானதுமான சேவையாக மாற்றும் ரேபிட் கே.எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய பேருந்து மையங்களில் ஒன்றாக விளங்கும் பாசார் சினி பேருந்து மையம், தினமும் சராசரியாக 6,000-க்கும் அதிகமான பயணிகளை கையாளும் 14 ரேபிட் கே.எல் பேருந்து பாதைகளை சேவையளிப்பதால், முதல் இடமாக தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், செயல்பாட்டு தேவைகள் மற்றும் பொருத்தத்திற்கேற்ப, இந்த “Ask Me” சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், அதில் ரேபிட் பினாங்கிற்கான வெல்ட் க்வே பேருந்து நிலையமும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
“பயணிகள் தங்களின் அன்றாட பயணங்களில் முக்கிய இணைப்பு மையங்களாக விளங்கும் இடங்களில், உதவியை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
“எளிதில் அடையாளம் காணக்கூடிய பணியாளர்கள் இருப்பது, பயணிகளின் குழப்பத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.




