மலிவு விலை விற்பனைத் திட்டத்தை வாரந்தோறும், அனைத்துத் தொகுதிகளிலும் விரிவுபடுத்த பி.கே.பி.எஸ். தயார்

7 மே 2026, 6:36 AM
மலிவு விலை விற்பனைத் திட்டத்தை வாரந்தோறும், அனைத்துத் தொகுதிகளிலும் விரிவுபடுத்த பி.கே.பி.எஸ். தயார்

ஷா ஆலம், மே 7: சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் 'ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டத்தை' (PJRM) வாரந்தோறும் நடத்தும் மத்திய அரசின் முடிவிற்குச் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS) தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்குவதற்காக, இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தப் போவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

இதனை வரவேற்றுப் பேசிய பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் கைரில் முகமட் ராசி, உலகளாவிய விநியோக நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின சவால்களை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் அனுபவமும் பி.கே.பி.எஸ். அமைப்பிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக, சிலாங்கூரில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் உட்புறக் கிராமங்களுக்கு இந்த மலிவு விலை விற்பனையை கொண்டு செல்வதில் பி.கே.பி.எஸ். கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சிலாங்கூர் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 80 மளிகைக் கடைகள், 4 மொத்த வியாபாரிகள் மற்றும் 38 பேரங்காடிகளுடன் பி.கே.பி.எஸ். ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த விற்பனை நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு முறைகள் குறித்து சிலாங்கூர் கே.பி.டி.என். (KPDN) மற்றும் பி.கே.பி.எஸ். இணைந்து இறுதி முடிவெடுக்கும் என்று அவர் விவரித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை சிலாங்கூரில் சுமார் 3,300 இடங்களில் 'ஏஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை' (JER) பி.கே.பி.எஸ். மிக வெற்றிகரமாக நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை விலையை விட சுமார் 30 சதவீதம் குறைவான விலையில் சமையலறைப் பொருட்களை வழங்கி வரும் இத்திட்டம், தற்போது வாராந்திர அடிப்படையில் விரிவுபடுத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.