காலை 3 மணி பொருளாதாரம்: உணவு விநியோகச் சங்கிலியின் பின்னணியில் உள்ள அமைதிப் படை வீரர்கள்

1 மே 2026, 3:53 AM
காலை 3 மணி பொருளாதாரம்: உணவு விநியோகச் சங்கிலியின் பின்னணியில் உள்ள அமைதிப் படை வீரர்கள்

ஷா ஆலம், மே 1: பெரும்பாலான மலேசியர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, ஒரு சிலர் தங்களின் அன்றாடப் பணிகளை அமைதியாகத் தொடங்கி, மற்றவர்களின் வாழ்க்கை தடையின்றி இயங்குவதை உறுதிசெய்ய அயராது பாடுபடுகின்றனர்.

புதிய விளை பொருட்களை ஏற்றி இறக்குவது முதல், பொருட்களைச் சரியான இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது வரை, சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடங்குவதை உறுதி செய்யும் ஆரம்பக்கட்ட செயல்முறைகளை இவர்களே இயக்குகின்றனர்.

குளிரூட்டப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது முறையான ஆடைகளிலோ இவர்கள் பணிபுரியா விட்டாலும், உணவு விநியோகச் சங்கிலியையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து இயங்க வைப்பதில் இவர்களின் பங்கு இன்றியமையாதது.

காய்கறி வியாபாரியான முகமது கைரி அபு சாமா, 52, அதிகாலையில் எழுவது ஒரு விருப்பம் அல்ல, மாறாக குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு கடமை என்கிறார்.

"நான் அதிகாலை 2 மணிக்கே என் வேலையைத் தொடங்கி விடுவேன். இது ஊக்கத்தைப் பற்றியது அல்ல, இது ஒரு பொறுப்பு," என்று செரி கெம்பாங்கான் ஈரச் சந்தையில் மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.

பணிச்சுமை இருந்தாலும், பரபரப்பு தொடங்குவதற்கு முன் அதிகாலை நேரம் அமைதியாக இருப்பதால், அது தனக்கு ஒருவித நிம்மதியைத் தருவதாக முகமது கைரி கூறுகிறார்.

"காய்கறிகளின் விலை அடிக்கடி ஏறி இறங்குவது தான் மிகப் பெரிய சவால். அதோடு, வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில், புதிய மற்றும் தரமான பொருட்களை எதிர் பார்க்கிறார்கள். இந்த சமநிலையை எட்டுவது மிகவும் கடினமாக உள்ளது," என்றார்.

"சில நேரங்களில் லாபம் மிகவும் குறைவாக இருப்பதால், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதே கடினமாகி விடுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாலை நேரங்களில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இடங்களை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரப்புவதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு வியாபாரியான ஜுல்கிஃப்லி அப் கனி, 45, தனது பங்கு பெரும்பாலும் திரைக்குப் பின்னால் தான் உள்ளது என்றார். கடை திறப்பதற்கு முன் மூலப் பொருட்களைத் தயார் செய்வதே அவரின் முக்கியப் பணியாகும்.

"வணிகம் தொடங்குவதற்கு முன்பே அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகப் பொருட்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படும்," என்றார் அவர்.

திரைக்குப் பின்னால் இயங்கும் சக்திகள்

சந்தையின் பரபரப்பு மற்றும் அதிகாலை வணிகத்திற்கு பின்னால், பொருட்கள் சரியான நேரத்தில் நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யும் மற்றொரு குழுவினர் உள்ளனர்.

லாரி ஓட்டுநரான ஷாருல் ரம்லீ, 41  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனது பணியைத் தொடங்குகிறார். விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய நீண்ட பயணங்களை அவர் மேற்கொள்கிறார்.

"இந்த வேலை நேரத்தோடு போட்டிப் போடுவது போன்றது. மிகவும் சீக்கிரம் சென்றால், பொருட்களைப் பெற யாரும் இருக்க மாட்டார்கள்; தாமதமானால், வாடிக்கையாளர்கள் அழைக்கத் தொடங்கி விடுவார்கள்."

"இரவில் வாகனம் ஓட்டும்போது சோர்வு ஒரு முக்கிய ஆபத்து. சீரற்ற சாலைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்கள் கூடுதல் சவால்கள்," என்றார் அவர்.

மற்றொரு ஓட்டுநரான கணகராஜ் குப்புசாமி, 47, தனது வேலை நேரம் நிச்சயமற்றது என்றும், விநியோகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை ஆகலாம் என்றும் கூறினார்.

"இந்த வேலையில் குறிப்பிட்ட முடிவு நேரம் கிடையாது. அனைத்து விநியோகங்களும் முடியும் வரை நாங்கள் வேலை செய்வோம்."

"ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பொருட்களை எடுப்பது, விநியோக அட்டவணையைப் பின்பற்றுவது, பல இடங்களில்  விநியோகித்து விட்டு வீடு திரும்புவது," என்றார் அவர்.

இவர்கள் பெரிதாகக் கவனிக்கப் படாவிட்டாலும், அன்றாடத் தேவைகள் சரியான நேரத்தில் சமூகத்தைச் சென்றடைவதை உறுதி செய்ய இந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்கள் உழைப்பை செலுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.