புத்ராஜெயா, மே 01 - இணைய வழி அடையாளத்தை உறுதிப்படுத்தும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையை வழங்குவதன் மூலம், நாட்டின் இலக்கவியல் சூழலுக்கு MyDigital ID ஒரு முக்கிய முதுகெலும்பாக விளங்குகிறது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
மில்லியன் கணக்கான மக்கள் MyDigital ID-ஐப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், அதன் வலுவான வேகம் தெளிவாகத் தெரிகிறது என்றும், இது சரியான பாதையில் செல்வதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அதன் தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றாலும், MyDigital ID இன்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை எட்டியுள்ளது. MyDigital ID குழுவினருக்கு எனது வாழ்த்துகள்," என்று அவர் கூறினார்.
"எங்களின் அணுகுமுறை சீரானது. MyDigital ID மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் (NACSA) நெருக்கமாக ஒத்துழைத்து, நிதித் துறையில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவதில் இருந்து நாங்கள் தொடங்கினோம். இது இலக்கவியல் பரிவர்த்தனைகளில் அடையாள சரிபார்ப்பை மேம்படுத்தவும், முக்கியமான நிதித் தொடர்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
இங்கு MyDigital ID மற்றும் அதன் வியூகப் பங்காளிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற விழாவைத் தொடக்கி வைத்துப் பேசிய பின்னர் அஹ்மட் ஸாஹிட் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலும் கலந்து கொண்டார்.
தற்போது இந்த முயற்சி, கைப்பேசிச் சூழல், கூட்டரசு மற்றும் மாநில அரசாங்க சேவைகள், கல்வித் துறை மற்றும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட இலக்கவியல் தளங்கள் என ஒரு பரந்த நிலப்பரப்பிற்கு விரிவுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையும் வெவ்வேறு பங்கைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற அடையாள சரிபார்ப்பு முறைக்கான பொதுவான தேவையால் அவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பு தனித்தனியாக நடக்க முடியாது, மாறாக முழு சூழலிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
"அரசாங்க நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் இலக்கவியல் தளங்கள் ஒன்றாகச் செயல்படும்போது, அபாயங்களைச் சமாளிக்கக்கூடிய ஒரு வலுவான, நெகிழ்வான அமைப்பை நாம் உருவாக்குகிறோம்," என்றார் அவர்.
அடுத்த கட்டம் 'ஒரே சாவி' (one key) அணுகுமுறையாகும். அதாவது, ஒரே நம்பகமான அடையாளம் மூலம் பல்வேறு சேவைகளைத் தடைகள் மற்றும் ஒன்றுக்கொன்று மேலெழுதல்கள் இல்லாமல் அணுகுவதாகும்.
"இதுவே நாம் நனவாக்க வேண்டிய பார்வை. இலக்கவியல் அடையாளம் நாட்டின் முதுகெலும்பாக மாறி, மக்கள் இலக்கவியல் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்க அதிகாரம் அளிக்கும் ஒரு மலேசியா," என்று அவர் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்ற விழாவில், முக்கியத் துறைகளில் தேசிய இலக்கவியல் அடையாளத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக 29 நிறுவனங்களுடன் MyDigital ID ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டரசு மற்றும் மாநில அரசாங்க நிறுவனங்களுக்காக சைபர் செக்யூரிட்டி மலேசியா (CSM), நலன்புரிச் சூழலுக்காக யாயாசான் மை காசி, கல்விக்காக யுனிவர்சிட்டி டெக்னோலொஜி மாரா (UiTM), இலக்கவியல் தளங்களுக்காக சோகார் மொபிலிட்டி மலேசியா Sdn Bhd (SOCAR), மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஒத்துழைப்பு நலன்புரி, கல்வி, அரசாங்க நிறுவனங்கள், இலக்கவியல் தளங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் MyDigital ID பயன்பாட்டை விரிவாக ஆதரிக்கும். இது பயனர்கள் தங்கள் அடையாளத்தை எளிதாகச் சரிபார்க்க உதவுவதோடு, மோசடி மற்றும் தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.
நாட்டின் இலக்கவியல் சூழலுக்கு MyDigital ID ஒரு முக்கிய முதுகெலும்பாக விளங்கும்
1 மே 2026, 1:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


