ஊபர் கிண்ணம்: சீனப் பெருஞ்சுவரைத் தாண்ட முடியவில்லை, காலிறுதியில் மலேசியாவின் பயணம் முடிந்தது

1 மே 2026, 1:53 AM
ஊபர் கிண்ணம்: சீனப் பெருஞ்சுவரைத் தாண்ட முடியவில்லை, காலிறுதியில் மலேசியாவின் பயணம் முடிந்தது

ஹார்சென்ஸ் மே 01: ஊபர் கிண்ணம் 2026 இறுதிச் சுற்றில் மலேசியாவின் பயணம், இன்று ஹார்சென்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், தற்காப்பு வெற்றியாளரான சீனாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து முடிவுக்கு வந்தது.

அணியின் தலைவர் எம். தின்னாவை நீக்கி சில மாற்றங்களுடன் களமிறங்கிய மலேசியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில், உலகின் 33ஆம் நிலை வீராங்கனையான கி. லெட்சணா, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான வாங் ஸி யீயிடம் கடும் போராட்டத்திற்குப் பிறகு 17-21, 18-21 என்ற நேர் செட்களில் 47 நிமிடங்களில் தோல்வியடைந்தார்.

இரண்டாவது ஆட்டத்தில், முதல் முறையாகக் களமிறங்கிய முதல் இரட்டையர் ஜோடியான ஓங் ஸின் யீ-கார்மென் டிங், உலகின் முதல் நிலை ஜோடியான லியு ஷெங் ஷு-டான் நிங்கிற்கு எதிராக அச்சமின்றி விளையாடினர். உலகின் 22ஆம் நிலை ஜோடியான மலேசிய இணை, தங்களது அபாரமான தற்காப்பு ஆட்டத்தால் போட்டியை மூன்றாவது செட்டிற்கு எடுத்துச் சென்றனர். இருப்பினும், 79 நிமிடங்கள் நீடித்த கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, 14-21, 21-16, 13-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர்.

மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சென் யூ ஃபே, மலேசியாவின் 37ஆம் நிலை வீராங்கனையான வோங் லிங் சிங்கை எளிதாக எதிர்கொண்டார். வெறும் 36 நிமிடங்களில் 21-10, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சீனாவின் அரையிறுதி இடத்தைத் உறுதி செய்தார்.

தோல்வியடைந்த போதிலும், மலேசிய அணி பெருமை கொள்ளலாம். ஏனெனில், 2004, 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, நான்காவது முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்று, தங்களது சிறந்த சாதனையை சமன் செய்துள்ளது.

முன்னதாக, மலேசிய அணி, குழு 'பி'-யில் துருக்கியை 3-2 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆறு முறை வெற்றியாளரான ஜப்பானிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஊபர் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி, மே 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.