ஷா ஆலாம், ஏப்ரல் 26: நிலைத்தன்மைக் கட்டணம் என்பது ஒரு புதிய வசூல் மட்டுமல்ல, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பொது சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கும், வருகையாளர்களின் வசதி மற்றும் உள்ளூர் சமூகத்தின் நலனுக்காகவும் மீண்டும் பயன் படுத்தப்படும்.
டத்தோ மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த அணுகுமுறை மிகவும் நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் மாநிலத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றார்.
"இந்த ஆண்டு நாம் நிலைத்தன்மைக் கட்டணத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பொது சுற்றுலாத் தலங்களில் உள்ள வசதிகளுக்காகத் திரும்பச் செலவிடுவோம்.”
"இதில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பது மற்றும் பிற தேவைகளும் அடங்கும்.”
"டூரிசம் சிலாங்கூர், மாவட்ட அலுவலகங்கள் போன்றவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்துவோம்," என்று அவர் கூறினார்.
நேற்று செகிஞ்சானில் உள்ள டெர்மினல் செகிஞ்சானில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான செகிஞ்சான் நெல் வயல் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம்-மும் கலந்து கொண்டார்.
பயனீட்டாளர் மற்றும் கூட்டுறவு விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ) தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ டி.எஸ். சைபுல்யாசான் எம். யூசோப் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சுற்றுலா வசதிகளை வலுப்படுத்தும் இந்த முயற்சி, இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS2) கீழ், பிராந்திய அளவில் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்கும் மாநில அரசின் பரந்த நோக்கத்துடன் ஒத்துப்போகிறது என்று அமிருடின் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைய, சிலாங்கூருக்கு அதிக அனைத்துலக சுற்றுலாப் பயணிகளைக் கவர சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்று அவர் மேலும் கூறினார்.
"நாம் இனி மலேசியாவில் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்று மட்டும் கனவு காணவில்லை, மாறாக RS2 திட்டத்தின் கீழ் தென்கிழக்காசியாவிலேயே ஒரு முக்கிய மாநிலமாக மாற விரும்புகிறோம்.”
"இது எளிதான காரியம் அல்ல. அதே நேரத்தில், இந்த இடத்தை சுற்றுலா மற்றும் சமூகத்திற்கு ஒரு சரியான இடமாக மாற்றுவது உட்பட, அந்த சவாலை நாம் ஏற்க வேண்டும்," என்றார் அவர்.
முன்னதாக, இங் சூ லிம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பார்வையாளர்களிடமிருந்து நிலைத்தன்மைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஹோட்டல்கள் மற்றும் தங்குமிட விடுதி நடத்துநர்களால் இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு (பிபிடி) வழங்கப்படும் என்றும், அதில் ஒரு சிறிய பகுதி மாநில அரசுக்குச் செல்லும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பொது சுற்றுலா வசதி, வருகையாளர்களின் வசதியை மேம்படுத்த நிலைத்தன்மைக் கட்டணம் பயன் படுத்தப்படும்.
26 ஏப்ரல் 2026, 2:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




