கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் MRO திறனை மேம்படுத்த SMP, EES நிறுவனங்களுடன் பூவோஸ்டெட் புரிந்துணர்வு ஒப்பந்தம்

22 ஏப்ரல் 2026, 5:37 AM
கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் MRO திறனை மேம்படுத்த SMP, EES நிறுவனங்களுடன் பூவோஸ்டெட் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்புகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேலாண்மை (MRO) திறன்களை மேம்படுத்துவதற்காக பூவோஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (பூஸ்டெட்) இன்று இரண்டு நிறுவனங்களுடன் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தங்கள், ஐக்கிய ராஜ்யத்தை (UK) தளமாகக் கொண்ட கடலடி பொறியியல் நிறுவனமான சப்மரீன் மானுஃபெக்சரிங் & புரோடக்ட்ஸ் லிமிடெட் (SMP) மற்றும் எரிசக்தி தளவாடங்கள், சொத்து மேம்பாடு மற்றும் MRO சேவைகளில் ஈடுபட்டுள்ள மலேசிய பொறியியல் நிறுவனமான என்ரா எனர்ஜி சொல்யூஷன்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் (EES) ஆகியவற்றுடன் கையெழுத்திட பட்டதாக பூவோஸ்டெட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களில் நிபுணத்துவம் பெற்ற SMP உடனான ஒப்பந்தம், நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்புகளை மேம்படுத்துவதில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கான இரு தரப்பினரின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது SMP-யின் நிபுணத்துவத்தையும், மலேசியாவில் தற்காப்பு தொடர்பான முயற்சிகளை எளிதாக்குவதில் பூஸ்டெட்டின் பங்கையும் பயன்படுத்திக் கொள்ளும்.

"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பூஸ்டெட் மூலோபாய தலைமைத்துவம் மற்றும் நிர்வாக ஆதரவை வழங்கும்; தற்காப்பு தொடர்பான பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கம் தொடர்பான நிறுவனங்களுடன் ஈடுபாட்டை எளிதாக்கும்; மேலும் திட்ட கட்டமைப்பு, நிதி மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

"இரு தரப்பினரும் தற்காப்புத் துறையில் செயல்பாட்டு ஒத்துழைப்பு, திட்ட மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஆராய்வார்கள்."

EES உடனான இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், அரச மலேசிய கடற்படையால் (TLDM) இயக்கப்படும் கப்பல்களின் உந்துவிசை மற்றும் மின் உற்பத்தி அமைப்புகளுக்கான MRO சேவைகளை கூட்டாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பினரும் இலக்கு வைக்கப்பட்ட கடற்படைத் திட்டங்களில் ஒத்துழைப்பார்கள். இதில் டெண்டர்களில் கூட்டாகப் பங்கேற்பது, தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்வது மற்றும் வணிக மேம்பாட்டு முயற்சிகளை கூட்டாக ஒருங்கிணைப்பது ஆகியவை அடங்கும்.

பாகங்களை அடையாளம் காணுதல், தரப்படுத்துதல் மற்றும் தளவாட ஆதரவு கட்டமைப்பு உள்ளிட்ட குறியீட்டுத் திறன் மேம்பாடுகளையும் பூவோஸ்டெட் மற்றும் EES இணைந்து ஆராயும்.

இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கு நடைபெற்ற ஆசிய தற்காப்பு சேவைகள் கண்காட்சி மற்றும் மாநாடு 2026 (DSA 2026) நிகழ்வில்,  பூவோஸ்டெட்   குழும நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் அஹ்மத் சபரின் அர்ஷாட், SMP நிர்வாக இயக்குநர் பென் ஷார்பிள்ஸ் மற்றும் EES தலைமைச் செயல் அதிகாரி இக்லாஸ் ஜைனல் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவிற்கு தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டின் சாட்சியாக இருந்தார். ஆயுதப்படை நிதி வாரியத்தின் (LTAT) தலைவர் ஜெனரல் (ஓய்வு) டான்ஸ்ரீ அசிசான் அரிஃபின், LTAT தலைமை நிர்வாகி முகமது அஷ்ரப் எம்.டி. ராட்சி,  பூவோஸ்டெட்   தலைவர் ஜெனரல் (ஓய்வு) டான்ஸ்ரீ டாக்டர் அப்துல் அஜீஸ் ஜைனல் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தற்போதைய நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரு பிணைப்பற்ற ஒத்துழைப்பு கட்டமைப்பாக செயல்படுகின்றன. மேலும் எந்தவொரு நிதிசார் கடமைகளையும் உருவாக்கவில்லை. குறிப்பிட்ட முயற்சிகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் தனித்தனி உறுதியான ஒப்பந்தங்கள் மூலம் இறுதி செய்யப்படும்.

மலேசியாவின் கடல்சார் தற்காப்பு சூழலை வலுப்படுத்துவதில் குழுமத்தின் கவனத்தை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்று அஹ்மத் சபரின் அந்த அறிக்கையில் கூறினார்.

"நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்புகள் முதல் கடற்படைக் கப்பல்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேலாண்மை சேவைகள் வரை, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நீண்டகால நிலைத் தன்மையை மேம்படுத்தும் கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.