சுக்மா 2026 ஒத்திவைப்பு: சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின் மாநில அரசு முடிவெடுக்கும்

20 ஏப்ரல் 2026, 9:52 AM
சுக்மா 2026 ஒத்திவைப்பு: சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின் மாநில அரசு முடிவெடுக்கும்

ஷா ஆலம், ஏப்ரல் 20: 2026 சிலாங்கூர் மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) ஒத்திவைக்கும் பரிந்துரையை, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் (ADN) கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலிக்கும்.

இந்த விவகாரம் விரிவான கருத்துக்களைப் பெறுவதற்காக சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் (DNS) விவாதிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.

"சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். அதன் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன், பெறப்பட்ட கருத்துக்களை மாநில அரசு ஆராயும்," என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 15வது சட்டமன்றத்தின் நான்காவது தவணை தொடக்க விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போட்டிகளை ஒத்திவைக்கப் பரிந்துரைத்த சிலாங்கூர் சுல்தானின் அறிவுரையும் மாநில அரசின் பரிசீலனையில் வழிகாட்டியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

"மாட்சிமை தங்கிய சுல்தானின் அறிவுரையை நாம் ஒரு வழிகாட்டியாகவும், அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டுதலாகவும் கொள்ள வேண்டும்," என்றார்.

செலவு மற்றும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு
சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இந்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும், எனவே இதற்கு முழுமையான ஆய்வு தேவை என்றும் முகமட் நஜ்வான் விளக்கினார்.

மேலும், சுல்தானின் அறிவுரை ஒரு முடிவான தீர்ப்பாகக் கருதப்படக்கூடாது, மாறாக முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஒரு வழிகாட்டியாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"சுக்மா என்பது மாநில அரசு மற்றும் இளைஞர், விளையாட்டு அமைச்சகம் (KBS) மூலம் மத்திய அரசு ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுக்கும் ஒரு தேசிய அளவிலான விளையாட்டு நிகழ்வாகும்."

"எனவே, எடுக்கப்படும் முடிவு அனைத்து தரப்பினரின் நலன்களையும் மற்றும் விரிவான பரிசீலனைகளையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை மாநில அரசு உறுதி செய்யும்," என்றார்.

முன்னதாக, மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி முடிவுக்கு வரும் வரையிலும், ஷா ஆலம் விளையாட்டரங்கம் முழுமையாகத் தயாராகும் வரையிலும் 22வது சிலாங்கூர் சுக்மா 2026 போட்டிகளை ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரைத்திருந்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் அதிக செலவாகும் என்பதால் இந்த ஆலோசனையைத் தாம் முன்வைப்பதாக மாட்சிமை தங்கிய சுல்தான் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, தற்போதைய பொருளாதார அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, 2026 சிலாங்கூர் சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை திட்டமிட்டபடி நடைபெறும், ஆனால் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜோஹாரி அறிவித்திருந்தார்.

ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாநில விளையாட்டு வீரர்களின் தயாரிப்புகள் உட்பட அனைத்து அம்சங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தௌஃபிக் கூறியிருந்தார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.