ஆட்டிசம் சிறார்களுக்கான ஆதரவுத் தளம்: பாங்கி சேவை மையத்தை வலுப்படுத்தும் மகளிர் அமைச்சு

17 ஏப்ரல் 2026, 4:02 AM
ஆட்டிசம் சிறார்களுக்கான ஆதரவுத் தளம்: பாங்கி சேவை மையத்தை வலுப்படுத்தும் மகளிர் அமைச்சு

ஷா ஆலம், ஏப்ரல் 17: நாட்டில் ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு மற்றும் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) பாங்கியில் ஆட்டிசம் சேவை மையத்தை (PPA) நிறுவி அதன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் (JPOKU) கீழ் செயல்படுத்தப்படும் இந்த முன்முயற்சியானது, ஆட்டிசம் பாதிப்புடையவர்களுக்குத் தேவையான ஆரம்பகால ஆதரவு மற்றும் தலையீட்டுச் சேவைகளை மிக எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாங்கியில் அமைந்துள்ள இந்த மையத்தில், சிறார்களிடம் காணப்படும் ஆட்டிசம் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான ஆரம்பகால பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களின் நலனை மேம்படுத்த கட்டமைக்கப்பட்ட ஆரம்பகால தலையீட்டுத் திட்டங்கள் மற்றும் பன்முகத் துறை சார்ந்த சிகிச்சை முறைகளும் இங்குச் சிறப்பு கவனத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மையத்தில் இணைவதற்கான தகுதிகள் குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆட்டிசம் அறிகுறிகளைக் கொண்ட 2 முதல் 12 வயதுக்குட்பட்ட மலேசியச் சிறுவர்கள் 'பிரிவு ஏ' (Category A) கீழும், 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 'பிரிவு பி' (Category B) கீழும் விண்ணப்பிக்கலாம்.

ஆட்டிசம் சிறார்களுக்கு மட்டுமின்றி, அவர்களைப் பராமரிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தேவையான மனநல ஆதரவு மற்றும் முறையான பராமரிப்புப் பயிற்சிகளையும் இந்த மையம் பிரத்யேகமாக வழங்கி வருகிறது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி அவர்கள், பாங்கி ஆட்டிசம் சேவை மையத்திற்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகள் மற்றும் பரிசோதனை முறைகளை ஆய்வு செய்தார்.

இந்த மையத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட அவர், ஆட்டிசம் சிறார்களுக்கான ஒரு சிறந்த சமூகச் சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்குப் பொதுமக்கள் 03-8926 1996 என்ற எண்ணிலோ அல்லது ppa_bangi@jkm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.