ஷா ஆலம், ஏப்ரல் 16 - சிலாங்கூர் மாநிலத்தின் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 296 மாணவர்கள், மாநில அரசின் ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ (Kembali Ke Sekolah) எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் பள்ளி உபகரணங்களைப் பெற்றுள்ளனர்.
சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் (எம்பிஐ) ஊடாகச் செயல்படுத்தப்படும் இந்த ஆண்டுக்கான உதவித் திட்டமானது, பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாகக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்துள்ளார்.
தேவையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளி தவணை தொடங்குவதற்கு முன்னரே அடிப்படைத் தேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் தொடர் முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், கல்வியே ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதால், பிள்ளைகள் எவ்விதத் தடையுமின்றி வசதியாகக் கல்வி கற்பதை உறுதி செய்யத் தமது அலுவலகம் எப்போதும் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குடும்பப் பொருளாதாரச் சிக்கல்களால் எந்தவொரு மாணவரும் கல்வியிலிருந்து பின்தங்கிவிடக் கூடாது என்பதில் சிலாங்கூர் மாநில அரசு காட்டும் அக்கறைக்கு இந்த உதவித் திட்டம் ஒரு சான்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது பெற்றோர்களுக்கு நிம்மதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்குச் செல்ல ஊக்கமளிப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
மந்திரி புசார் அறக்கட்டளையின் (எம்பிஐ) சமூகப் பங்களிப்பு குறித்து அதன் தலைவர் அகமட் அஸ்ரி சைனல் நோர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சுமார் ஒரு மில்லியன் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்களை வழங்க ஏறக்குறைய 20 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குக் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதி சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளி உபகரணங்கள் மட்டுமன்றி, சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டம் (PTRS), இலவச மடிக்கணினிகள் மற்றும் இணையச் சேவை போன்ற பல்வேறு கல்விசார் உதவிகளையும் எம்பிஐ அறக்கட்டளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.








