கிள்ளான், ஏப்ரல் 9: கிள்ளான், தாமான் மேவா ஜெயா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த மறுசுழற்சிப் பொருட்கள் தொடர்பாக வந்த தொடர் புகார்களை அடுத்து, கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்பிடிகே) இன்று அதிரடி அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த இந்தச் சிறப்புச் சோதனையின் போது, அந்த வீட்டிலிருந்து சுமார் 20 டன் எடையுள்ள மறுசுழற்சி கழிவுகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
'i-Responz' எனும் புகாரளிக்கும் முறைமையின் வாயிலாக அப்பகுதி மக்கள் வழங்கிய தொடர் புகார்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்பிடிகே தெரிவித்துள்ளது.
இது குறித்து எம்பிடிகே வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வீட்டின் உரிமையாளர் மறுசுழற்சி பொருட்களை முறையாகப் பராமரிக்காமல் குவித்து வைத்திருந்ததால், சுற்றுவட்டார மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த அசுத்தமான சூழல் அப்பகுதியின் தூய்மையைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது கண்டறியப்பட்டது.
சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில், மாநகராட்சியின் சுகாதாரத் துறை, பொறியியல் துறை, சுற்றுச்சூழல் சேவைத் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு எனப் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டனர்.
தொடர்ந்து குவிக்கப்படும் இத்தகைய கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதோடு, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதால் தீ விபத்துகளுக்கும் வாய்ப்புள்ளதாக எம்பிடிகே எச்சரித்துள்ளது.
"பொதுமக்கள் தங்களின் குடியிருப்புப் பகுதிகளை மறுசுழற்சிப் பொருட்களைச் சேமித்து வைக்கும் இடங்களாக மாற்ற வேண்டாம். அத்தகையச் செயல்பாடுகள் பொதுச் சுகாதாரத்தைப் பாதித்தால் தயக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என எம்பிடிகே தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
கிள்ளான் மாநகரின் தூய்மையையும் நீடித்த நிலைத்தன்மையையும் பேணுவதில் எம்பிடிகே கொண்டுள்ள உறுதியை இத்தகைய நடவடிக்கைகள் பறைசாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா









