இஸ்தான்புல்: ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இல்லாத அளவிற்கு, கடந்த வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது அந்த முக்கிய கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பகுதி மீட்சியைக் காட்டுகிறது என்று அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரின்டிராஃபிக் (MarineTraffic) தரவுகளின்படி, கடந்த வார இறுதியில் மொத்தம் 21 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.சனிக்கிழமை 10 கப்பல்களும், ஞாயிற்றுக்கிழமை 11 கப்பல்கள் கடந்து சென்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு நாள் எண்ணிக்கை, மார்ச் மாத தொடக்கத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அப்போதுதான், அப்பகுதியில் பதட்டங்கள் அதிகரித்ததால் போக்குவரத்து குறையத் தொடங்கியது.
பாரசீக வளைகுடாவில் இருந்து தங்கள் கப்பல்கள், சரக்குகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஈரானிடமிருந்து பல நாடுகள் பெறத் தொடங்கியுள்ள நிலையில் இந்த போக்குவரத்து அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. இது ஹார்முஸ் ஜலசந்தி மீதான தெஹ்ரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
மரின்டிராஃபிக் மற்றும் கெப்ளர் (Kpler) தரவுகள், ஞாயிற்றுக்கிழமை பயணித்த கப்பல்களில் கிட்டத்தட்ட பாதி, தடைகளுக்கு உள்ளான கப்பல்கள் என்பதைக் காட்டுகின்றன. இது, ஒட்டுமொத்த போக்குவரத்து அதிகரிப்புடன், அதன் கலவையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.
புவிசார் அரசியல் சொல்லாடல்கள் அதிகரித்திருந்தாலும், வார இறுதியில் ஜலசந்தியில் எந்தவொரு நேரடித் தாக்குதல்களோ அல்லது பாதுகாப்பு சம்பந்தப் பட்ட சம்பவங்களோ பதிவு செய்யப் படவில்லை.
இது கப்பல் போக்குவரத்திற்கான குறுகிய கால செயல்பாட்டு ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்திற்கான ஒரு முக்கிய வழித்தடமாகும்.
இது வளைகுடா உற்பத்தியாளர்களை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கிறது. இந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும், எரிசக்தி விலைகள், கப்பல் கட்டணங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பெர்னாமா-அனடோலு




