மேற்காசிய மோதல்: சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான செலவின அதிகரிப்பை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்

2 ஏப்ரல் 2026, 8:15 AM
மேற்காசிய மோதல்: சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான செலவின அதிகரிப்பை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்


ஷா ஆலாம், ஏப்ரல் 2: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டியின் (சுக்மா) ஏற்பாட்டுச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் தயாராகி வருவதாக மாநில விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.

குறிப்பாக எரிபொருளை உள்ளடக்கிய சரக்கு போக்குவரத்து செலவினங்களின் உயர்வு தொடர்பான சிக்கலை, சிலாங்கூர் சுக்மா செயலகம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி தலைமையிலான சுக்மாவின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விரைவில் முன்வைக்கும் என்று அவர் கூறினார்.

"தற்போதைக்கு, டீசல் விலை திடீரென உயர்ந்தால், மாநில அரசாங்கம் அந்த செலவை ஏற்க வேண்டியிருக்கும். இது ஒரு பெரிய சவாலாக அமையும். இருப்பினும், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தங்குமிடச் செலவுகள் பாதிக்கப்படாது.

"இந்த எதிர்பாராத சூழ்நிலையை கணிப்பது கடினம். இது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசாங்க மட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தது. எனவே, இந்த செலவின அதிகரிப்பின் தாக்கம் குறித்து சிலாங்கூர் உயர்மட்டக் குழுவின் ஆலோசனையைப் பெறும்," என்று அவர் இன்று ஷா ஆலாம் அரங்கத்தில் உள்ள ஜெயன்ட் பேரங்காடியின் மறுதொடக்க நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், இந்த இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் இதுவரை எந்தவித இடையூறும் இன்றி திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெற்று வருவதாக நஜ்வான் உறுதியளித்தார்.

"தற்போது நிலவும் மோதல் காரணமாக சிலாங்கூரில் சுக்மா நடத்துவதை ஒத்திவைக்க எந்தக் கோரிக்கையும் எழவில்லை," என்றார் அவர்.

22ஆவது சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24, 2026 வரை நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக சுற்றோட்டப் பாதையில் நடைபெறும். பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 15 முதல் 20, 2026 வரை நடைபெறும்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.