ஷா ஆலம், ஏப்ரல் 2: 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டி’சுக்மாவில்’ கலந்து கொள்ளும் சிலாங்கூர் விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, இறுதிப் பட்டியல் இம்மாதம் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், நீண்ட பட்டியலில் உள்ள வீரர்கள் மதிப்பிடப் பட்டு வருவதாகவும், விரைவில் ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் குறுகிய பட்டியலை இறுதி செய்யும் என்றும் சிலாங்கூர் சுக்மா குழுவின் தலைவர் அப்பாஸ் சலிமி அஸ்மி கூறினார்.
"கடந்த மாதம், அனைத்து மேலாளர்கள் மற்றும் அணித் தலைவர்களுடன் நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம். பதக்க இலக்கை அடைவதை உறுதி செய்வதில் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக நல்ல கருத்துகள் கிடைத்துள்ளன.
"இருப்பினும், சில சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். மாநிலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்த பலர் விண்ணப்பித்தி-ருப்பதால் விளையாட்டு வீரர்களின் பட்டியல் இன்னும் நீளமாக உள்ளது. இது இம்மாதம் தீர்க்கப் படும் என்று நான் நம்புகிறேன்.
"இரண்டாவதாக, சில விளையாட்டுத்திடல்களில் உள்ள தொழில் நுட்பச் சிக்கல்களுக்கு மாநில விளையாட்டு மன்றத்தின் (MSN) கவனம் தேவைப் படுகிறது.
பாய்மரப் படகோட்டப் போட்டிக்கு இடமளிக்கும் கோலா லங்காட் பகுதிக்கு அடுத்த வாரம் நான் எனது பயணத்தைத் தொடங்குவேன். இந்தச் சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
சரவாக்கில் 2024 சுக்மா போட்டிகள் முடிவடைந்த உடனேயே சிலாங்கூர் குழுவின் தயாரிப்புகள் முன்கூட்டியே தொடங்கி விட்டதாக அப்பாஸ் கூறினார்.
"சரவாக்கில் நாங்கள் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது. திரும்பிய பிறகு, நாங்கள் பயிற்சி மற்றும் அணியை உருவாக்கும் பணிகளைத் தொடங்கி விட்டோம்.
"அனைத்து விளையாட்டுகளுக்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் முன்கூட்டியே தயாராகி விட்டதால், விளையாட்டு வீரர்களின் பயிற்சித் தயாரிப்புகள் தற்போது மிகவும் திருப்திகரமாக உள்ளன," என்றார்.
கடந்த பிப்ரவரியில், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் (MSN) நிர்வாக இயக்குநர் முகமது நிஜாம் மர்ஜுகி, இந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியில் மாநிலக் குழு சுமார் 80 தங்கப் பதக்கங்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
37 வகையான விளையாட்டுகளை உள்ளடக்கிய 474 போட்டிகளில் 15 முதல் 20 விழுக்காடு போட்டிகளில் சிலாங்கூர் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
சரவாக்கில் நடைபெற்ற சுக்மா 2024-இல், சிலாங்கூர் 181 பதக்கங்களுடன், அதாவது 56 தங்கம், 64 வெள்ளி மற்றும் 61 வெண்கலத்துடன் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டியது.
22-வது சுக்மா போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற விருக்கிறது. இதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக பந்தய சுற்றோட்டப் பாதையில் நடைபெறும். பாரா சுக்மா போட்டிகள் 2026 செப்டம்பர் 15 முதல் 20 வரை நடத்தப்படும்.





