காஜாங், மார்ச் 26 - காஜாங் நகரின் முக்கிய அடையாளமாகவும், மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மையமாகவும் விளங்கும் காஜாங் பொதுச் சந்தையின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் மிக விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் இயோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தைச் சீராகச் செயல்படுத்துவது குறித்து, வியாபாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க விரைவில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
முன்னதாக, இச்சந்தையை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) 15 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருந்தது. எனினும், அவ்வாறு செய்தால் வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்படும் என அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், தற்போது அந்தத் திட்டம் மேம்பாட்டுப் பணிகளாக மாற்றப்பட்டுள்ளது.
"இந்தச் சந்தை முழுமையாக இடிக்கப்படாது; மாறாக, நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இதன் மூலம் வியாபாரிகள் தங்களின் வருமானத்தை இழக்காமல் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியும்," என்று திரு. டேவிட் சியோங் விளக்கமளித்துள்ளார்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு இயங்கி வரும் நிலையில், சந்தையின் இரண்டாவது தளம் சரியாகப் பயன்படுத்தப்படாமல் பெரும்பாலும் சேமிப்புக் கிடங்காகவே (store) இருந்து வருகிறது. எனவே, அத்தளத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை குறித்தும் குடியிருப்பாளர்களும் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மீதம் இருந்தால், கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2024-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 12 பொதுச் சந்தைகளைக் கட்ட வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு 180 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருந்தது. இதில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள காஜாங் சந்தை உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்காக மட்டும் 77 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இச்சந்தையின் கழிப்பறைப் பராமரிப்பு, மின்சாரக் கேபிள்களை மாற்றுதல் மற்றும் சாயம் பூசுதல் போன்ற பணிகளுக்காகக் கூடுதலாக 850,000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது. சுங்கை ஜெலோக் அருகே அமைந்துள்ள இச்சந்தை, இப்பகுதி மக்களின் மிக முக்கியமான வர்த்தக மையமாகத் திகழ்ந்து வருகிறது.







