மேற்காசியப் போர் பதற்றம்: நாட்டின் கட்டுமானத் துறை மற்றும் சொத்துச் சந்தையில் விலை உயர்வு அபாயம்

31 மார்ச் 2026, 4:28 AM
மேற்காசியப் போர் பதற்றம்: நாட்டின் கட்டுமானத் துறை மற்றும் சொத்துச் சந்தையில் விலை உயர்வு அபாயம்

ஷா ஆலம், மார்ச் 31: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்களால் கட்டுமானச் செலவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் சொத்துடைமைத் துறை பெரும் அழுத்தத்தைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதன் உண்மையான பாதிப்பு சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னரே தெரியவரும் என்று மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (பேராக்) கட்டிடச் சூழல் புலனத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் அசிசுல் அஸ்லி அகமட் கூறினார்.

மேம்பாட்டாளர்களிடம் கட்டுமானப் பொருட்களுக்கான கையிருப்பு இருப்பதால், தற்போதைய ஆரம்பக்கட்ட பாதிப்புகள் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இது குறுகிய காலத்தில் செலவு உயர்வைத் தள்ளிப் போடுவதாகவும் அவர் விளக்கினார்.

"கட்டுமானத் துறையில் பொதுவாக ஆறு மாதக் காலத் தாமதம் இருக்கும், ஏனெனில் சில பொருட்கள் சந்தையில் ஏற்கனவே கையிருப்பில் உள்ளன."

"மேம்பாட்டாளர்கள் இப்போது மிகவும் அஞ்சுவது இரும்பு போன்ற மூலப்பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் மீதான பாதிப்புதான். இவை அனைத்தும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூர்
தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரது கூற்றுப்படி, மூலப்பொருட்கள், தொழிலாளர் மற்றும் போக்குவரத்துச் செலவுகளின் அதிகரிப்பு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் நேரடி அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சந்தையில் உள்ள சொத்துகளின் விலைகளைப் பாதிக்கும்.

இருப்பினும், கட்டுமானத்தில் இலாப அளவு குறைவாக இருப்பதால், ஆரம்பத்தில் விலை உயர்வு மூன்று முதல் ஐந்து விழுக்காடு வரை மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அதே நேரத்தில், OPR
போன்ற நிதிக் கொள்கைகளும், எதிர்காலத்தில் சொத்துடைமைச் சந்தையின் திசையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

"கூலி, தொழிலாளர் மற்றும் மூலப்பொருட்களின் செலவுகள் உயரும். இதனால், வீடுகளின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும். ஆனால், சில தரப்பினர் கூறுவது போல் 40 முதல் 50 விழுக்காடு வரை திடீர் விலை உயர்வு இருக்காது."

"தற்போது ஓபிஆர் விகிதம் நிலையாக உள்ளது, ஆனால் இந்த மாத இறுதி முதல் மே மாதம் வரை அரசாங்கத்தின் கொள்கை என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதில் மாற்றம் ஏற்பட்டால், சொத்துகளுக்கான தேவையும் நிச்சயமாக மாறும்," என்றார்.

இது தவிர, எரிசக்தி நெருக்கடி மற்றும் எண்ணெய் விலை உயர்வும் எதிர்கால மேம்பாட்டு வடிவமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மேலும் திறமையான எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

"இன்றைய வீட்டு கட்டுமானங்களில் ஆற்றல்-நட்பு வடிவமைப்புகள் தேவைப்படுகின்றன. சோலார் பேனல்கள் மற்றும் செலவு குறைந்த பொருட்களின் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.