உலு லங்காட்டில் புதிய சுற்றுலா ஈர்ப்பாக புஞ்சாக் ALOP மீண்டும் திறப்பு

31 மார்ச் 2026, 3:50 AM
உலு லங்காட்டில் புதிய சுற்றுலா ஈர்ப்பாக புஞ்சாக் ALOP மீண்டும் திறப்பு

மார்ச் 31: விரிவான மேம்படுத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு, சிலாங்கூரின் புதிய சுற்றுலா ஈர்ப்பாக புஞ்சாக் அம்பாங் லுக் அவுட் பாயிண்ட் (புஞ்சாக் ALOP) மீண்டும் பொது மக்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது. இந்த மறுதிறப்பு, குறிப்பாக உலு லங்காட் போன்ற ஆற்றல்மிக்க பகுதிகளில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதில் மாநில அரசின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"செயற்குழு உறுப்பினராக எனது முதல் தவணையின் போது, சிலாங்கூர் மாநில வனத்துறையுடன் (JPNS) இணைந்து இந்தப் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்று வதற்கும், அதற்குப் புத்துயிர் அளிப்பதற்கும் நாங்கள் ஆராய்ந்தோம்.""நான் மந்திரி புசாரான பிறகு, சரிவு பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பின் இந்தப் பகுதியின் ஆற்றலை நாங்கள் நம்பியதால், இங்குள்ள பல்வேறு இடங்களையும் ஆராய்ந்தோம்.

பின்னர் 2025-இல் இதன் செயலாக்கத்தைத் தொடங்கினோம்.""தீம் பார்க்குகள் போன்ற சிலாங்கூரில் உள்ள மற்ற ஈர்ப்புகளைப் போல புஞ்சாக் ALOP-ம் மிகவும் கவர்ச்சிகரமான ஒரு சுற்றுலா ஈர்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன். இது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும்," என்று அவர் கூறினார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற புஞ்சாக் அம்பாங் லுக் அவுட் பாயிண்ட் (ALOP) திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் மற்றும் டூரிசம் சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி சுவா யீ லிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், புஞ்சாக் ALOP புனரமைப்புத் திட்டம் முழுவதுமாக தனியார் துறையால் நிதியளிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப் படுவதாகவும், இது அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் சூ லிம் கூறினார்.

அவரது கூற்றுப்படி, நிறைவடைந்த முதல் கட்டப் பணியில் 1 கோடி ரிங்கிட் முதலீடு செய்யப் பட்டுள்ளது, அதே நேரத்தில் இரண்டாம் கட்டப் பணிக்கு மொத்தமாக 2.5 கோடி ரிங்கிட் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

"இரண்டாம் கட்ட வளர்ச்சியில், முகாம் தளம் மற்றும் கேரவன் வசதிகள், கண்காணிப்புக் கோபுரம் கட்டுதல் போன்ற வசதிகள் அடங்கும். இது புஞ்சாக் ALOP-ஐ மாநிலத்தின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்தும்.""பாதுகாப்பு, விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய, புஞ்சாக் ALOP செயல்பாட்டு உரிமத்தையும் பெற்றுள்ளது," என்றார் அவர்.

தாழ்நில டிப்டெரோகார்ப் வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புஞ்சாக் ALOP, கிட்டத்தட்ட முழு கோலாலம்பூர் மாநகரத்தின் பரந்த காட்சியை வழங்குகிறது.இப்பகுதி இளைஞர்களிடையே இரவு நேரச் செயல்பாடுகளுக்கு விருப்பமான இடமாகவும், மிதிவண்டி சமூகத்தினரிடையே ஒரு பிரபலமான இடமாகவும் விளங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.