கடும் வெயில்: வெளி நடவடிக்கைகளைத் தவிருங்கள்; வெப்பப் பக்கவாதத்தைத் தடுக்க நீர்ச்சத்துடன் இருங்கள்

30 மார்ச் 2026, 6:10 AM
கடும் வெயில்: வெளி நடவடிக்கைகளைத் தவிருங்கள்; வெப்பப் பக்கவாதத்தைத் தடுக்க நீர்ச்சத்துடன் இருங்கள்
ஷா ஆலம், மார்ச் 30: வெப்பமான வானிலை நிலவுவதால், உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் வெளி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

பொது சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால், குடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

"வெளி நடவடிக்கைகளைக் குறைத்து, உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தாகம் இல்லா விட்டாலும், ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.""குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் வெயிலில் பணிபுரிபவர்களுக்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியம்," என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

ஊழியர்களும் மாணவர்களும் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதிசெய்ய, முதலாளிகளும் பள்ளி நிர்வாகங்களும் போதுமான குடிநீர் வசதியை வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். வெப்ப வானிலையின் தாக்கத்தைச் சமாளிக்க, பொது விழிப்புணர்வு முயற்சிகள், சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் பிற நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

"காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க, நீண்டகால முயற்சிகளாக விழிப்புணர்வுக் கல்வி,  நகர்ப்புறப் பசுமையாக்கல் மற்றும் சமூகத்தயார் நிலை போன்றவை விரிவுபடுத்தப்படும்," என்றார்.

தலைச்சுற்றல், குமட்டல், தசைப்பிடிப்பு, உடல் பலவீனம், மூச்சுத்திணறல், சருமம் சூடாதல் அல்லது அதிகப்படியான வியர்வை போன்ற வெப்பப் பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜமாலியா நினைவூட்டினார்.

"மயக்கம், கடுமையான நீரிழப்பு அல்லது அதிக உடல் வெப்பநிலை போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிகிச்சை பெறவும்," என்று அவர் ஆலோசனை மேலும் கூறினார்.

இதற்கிடையில், வறண்ட வளிமண்டலச் சூழல் மற்றும் குறைந்த மழையளவு காரணமாக, ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் வரை இந்த வெப்பமான வானிலை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.