நிச்சயமற்ற நிலை காரணமாக, திங்கட்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

30 மார்ச் 2026, 4:28 AM
நிச்சயமற்ற நிலை காரணமாக, திங்கட்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

மேற்கு ஆசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் மோதலின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக, சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்வதால், திங்கட்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. காலை 8 மணியளவில், உள்ளூர் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4.0125/4.0305 ஆக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 4.0105/0140 ஆக இருந்தது.

வங்கி முவாமாலட் மலேசியா பெர்ஹாட் தலைமைப் பொருளியல் நிபுணர் முகமது அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் கூறுகையில், அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கத்தால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை சந்தை உணர்வுகளைத் தொடர்ந்து பாதிப்பதால், அந்நியச் செலாவணி சந்தை இடர் தவிர்ப்பு கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்றார்.

அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 100.328 புள்ளிகளுக்கு உயர்ந்தது, இது வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் அமெரிக்க டாலரை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். அதே நேரத்தில், பிம்கோ (PIMCO) மற்றும் ஜேபி மோர்கன் (JP Morgan) போன்ற உலகளாவிய பத்திர நிதி மேலாளர்கள், இந்த மோதல் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் பத்திரங்களின் விலைகள் உயரும் என்று எச்சரித்துள்ளனர்.

"இந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டியிருக்கலாம். எனவே, இடர் தவிர்ப்பு அணுகுமுறை காரணமாக ரிங்கிட் RM4.00 என்ற நிலைக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த வாரம், வெள்ளிக்கிழமை அன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் வேளாண் அல்லாத ஊதியப் பட்டியல் (NFP) குறித்த தொழிலாளர் சந்தைத் தரவுகளைச் சந்தை கண்காணிக்கும் என்று முகமது அஃப்சானிசாம் குறிப்பிட்டார்.பிப்ரவரி மாத NFP 92,000 சரிவைச் சந்தித்தது. வரவிருக்கும் தரவுகளில் 56,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தொழிலாளர் சந்தைத் தரவுகள் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் அவர் கூறினார்.

"ஈரானில் நடந்த போரைத் தொடர்ந்து பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்ததால், வணிக மற்றும் நுகர்வோர் உணர்வுகள் பலவீனமடைந்ததே இதற்குக் காரணம்."ஈரான் மீதான போரின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் ஃபெடரல் திறந்த சந்தைக் குழுவின் (FOMC) முடிவுகளில் இது எவ்வாறு எதிரொலிக்கும் என்பது குறித்த அறிகுறிகளை வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் தேடுகின்றனர்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை 5.3368/3414 ஆக இருந்த பவுண்ற்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 5.3101/3340 ஆக உயர்ந்தது. யூரோவிற்கு எதிராக 4.6197/6237 இலிருந்து 4.6108/6314 ஆகவும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.5084/5109 இலிருந்து 2.5044/5158 ஆகவும் உயர்ந்தது.

ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.1164/1194 இலிருந்து 3.1100/1244 ஆகவும், தாய்லாந்து பாட்டிற்கு எதிராக 12.1903/2077 இலிருந்து 12.1624/2255 ஆகவும் உயர்ந்தது.இருப்பினும், இந்தோனேசியா ரூபியா விற்கு எதிராக உள்ளூர் நாணயம் 236.1/236.5 இலிருந்து 236.3/237.4 ஆக சரிந்தது. பிலிப்பைன்ஸ் பேசோ விற்கு எதிராக 6.62/6.63 இலிருந்து 6.62/6.66 என்ற அளவில் நிலையாக இருந்தது.:

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.