ஜோகூர் பாரு: மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நிச்சயமற்ற நிலையைத் தொடர்ந்து, மக்கள் நலன், பணவீக்க அழுத்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இதன் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான 4.0 முதல் 4.5 விழுக்காடு வரையிலான வளர்ச்சி இலக்கு தற்போதைக்கு நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் உட்பட தற்போதைய பல்வேறு அபாயங்களை இந்தக்கணிப்பு கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் கூறினார்.
இருப்பினும், பொருளாதார வளர்ச்சி இலக்கில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை பேங்க் நெகாரா மலேசியா அறிவிக்கும். இதற்கிடையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர, உள்நாட்டு செலவினங்கள் தேவைக் கேற்ப பராமரிக்கப்பட வேண்டும், தனியார் முதலீடுகள் தொடர்ந்து ஊக்குவிக்கப் பட வேண்டும், மேலும் அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்றும் அக்மல் கூறினார்.
அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளுடன், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான தேவைகளை அரசாங்கம் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய அழுத்தம் எண்ணெய் விநியோகம் மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஆகும். ஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அந்த சமநிலையை ஏற்படுத்த வேண்டும்," என்று அவர் இன்று இங்குள்ள ஜோகூர் பாரு நாடாளுமன்றத்தின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் கருத்துரைத்த அவர், தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தை (MTEN) அரசாங்கம் செயல் படுத்தியுள்ளது என்றார். தற்போதைய முன்னேற்றங்களை சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் கண்காணிக்கவும், மோதலின் தாக்கத்தைக் கையாள்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை ஆராயவும் இந்த மன்றம் இப்போது வாரந்தோறும் கூடுகிறது.
MTEN கலந்துரையாடல்களின் முடிவுகள் முடிவெடுப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்படும் என்று அக்மல் நஸ்ருல்லா கூறினார். அதே நேரத்தில், தற்போதைய சவால்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்களின் விளைவுகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) உட்பட பல்வேறு தரப்பினருடன் பொருளாதார அமைச்சு கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
எரிசக்தி உட்பட உள்நாட்டு விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும், நடுத்தர காலத்தில் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, உலகளாவிய நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்ட போதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை அரசாங்கம் 4.0 முதல் 4.5 விழுக்காடு என்ற அளவில் தக்க வைத்துக் கொண்டது. மேலும், சமீபத்திய முன்னேற்றங்களின் அடிப்படையில் அவ்வப்போது மறுமதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.




