பினாங்கு, மார்ச் 23;- பினாங்கு மாநிலத்திற்கும் சீனாவின் குவாங் டாவ் நகருக்கும் இடையிலான முதல் நேரடி விமான சேவை வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப் படவுள்ளது.
இது மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வான் வழித் தொடர்பை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பினாங்கு சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் கூறுகையில், குவாங் டாவ் ஏர்லைன்ஸ் (Qingdao Airlines) மூலம் இயக்கப்படும் இந்த புதிய வழித்தடம், குறிப்பாக சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத் தக்க வளர்ச்சியாகும் என்றார்.
"இந்த புதிய வழித்தடத்தின் அறிமுகத்துடன், பினாங்குடன் நேரடி விமான இணைப்பு கொண்ட சீனாவின் வடகோடி நகரமாக குவாங் டாவ் திகழும்," என்று அவர் கூறினார்."இந்த முக்கிய வளர்ச்சி, சீனாவுடனான பினாங்கின் வான்வழித் தொடர்புகள் தொடர்ந்து விரிவடை-வதைப் பிரதிபலிக்கிறது, இதன்வழி எங்களின் வலையமைப்பு படிப்படியாக அதிகரித்து ஒட்டு மொத்த இணைப்பை வலுப்படுத்துகிறது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த புதிய வழித் தடத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் நோக்கில், நேற்று நடைபெற்ற ' குவாங் டாவ் -பினாங்கு நேரடி விமான சேவை தொடக்க விழா மற்றும் ஒத்துழைப்பு சந்திப்பு' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாநிலப் பிரதி நிதிக் குழுவிற்கு தலைமை ஏற்று வோங் தற்போது ஷான்டோங் மாநிலத்தில் உள்ளார்.
ஷான்டோங் மாநில புள்ளிவிவரப் பணியக தரவுகளை மேற்கோள்காட்டி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் அம்மாநிலத்தின் மக்கள் தொகை 10.43 கோடியை எட்டியுள்ளது என்றும், இந்த புதிய வழித்தடம் யான்டாய், ஜினான், ஸிபோ, வெய்ஃபாங், வெய்ஹாய் மற்றும் ரிஷாவ் உள்ளிட்ட மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களுக்கான நுழைவாயிலாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்த வழித்தடம், கிங்டாவ் ஜியோடாங் அனைத்துலக விமான நிலையத்தை ஒரு வியூக மையமாகப் பயன்படுத்த பினாங்கிற்கு வழி வகுக்கும். இது ஹார்பின், சாங்சுன், யான் ஜி மற்றும் டாலியன் போன்ற வடகிழக்கு சீன நகரங்களுடனான தொடர்பை மேம்படுத்தி, வடக்கு சீன சந்தையை ஆராய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று வோங் குறிப்பிட்டார்.
"மேலும், தென் கொரியாவின் சியோல், ஜேஜு மற்றும் டேகு, ஜப்பானின் ஒசாகா மற்றும் நகோயா போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய கிங் டாவ் ஏர்லைன்ஸின் வலையமைப்பு, பினாங்கினை ஷான்டோங் மற்றும் வடகிழக்கு சீனாவுடன் இணைப்பது மட்டுமல்லாமல், பரந்த வடகிழக்கு ஆசிய சந்தையில் பினாங்கிற்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தந்து, பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும்," என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கிங்டாவ் நகரின் துணை மேயர் காவ் ஜியான், மலேசியா தற்போது கிங் டாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மூன்றாவது பெரிய ஆதாரமாக உள்ளது என்றார். "இந்த நேரடி விமான சேவையின் மூலம், துடிப்பான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இரண்டு நகரங்களை ஒரே வழித்தடம் இணைக்கும், மேலும் பயண நேரத்தை ஒரே நாள் பயணமாக குறைக்கும்," என்றார் அவர்.
பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப் படுத்துதல், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பரிமாற்றம், மற்றும் பலதரப்பட்ட ஈடுபாட்டின் மூலம் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.




