கிள்ளான் ஐலேண்ஸ் தமிழ் பள்ளியை சேர்ந்த சிறுமி சீனாவில் தங்கம் வென்று மலேசியாவை பெருமைப் படுத்தினார்

23 மார்ச் 2026, 3:37 AM
கிள்ளான் ஐலேண்ஸ் தமிழ் பள்ளியை சேர்ந்த சிறுமி சீனாவில் தங்கம் வென்று மலேசியாவை பெருமைப் படுத்தினார்

கோலாலம்பூர், 23 மார்ச்: சிலாங்கூரின் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, சீனாவின் செங்டூவில் நடைபெற்ற “The Dance of Asia 2026” என்ற சர்வதேச நடனப் போட்டியில் முதலிடம் பெற்று நாட்டின் பெருமையை உயர்த்தினார்.

தேசிய மாதிரி ஐலேண்ஸ் தமிழ்  Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Highlands பள்ளியில் பயிலும் யோஷ்னா லோகேந்திரன், 13 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தையும், மொத்த நிகழ்ச்சிக்கான வெள்ளிப் பரிசையும் வென்றார்.

இந்த போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த அவரது தாய், தொழில் முனைவோர் பி. மோகனேஸ்வரி (42), இது தங்களது குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான சாதனையாகும் என்று கூறினார்.

இது தனது மூத்த மகளின் முதல் சர்வதேச மேடை அனுபவமாகும் என்றும் தெரிவித்தார். “யோஷ்னா ஐந்து வயதிலிருந்தே நடனம் கற்றுக் கொண்டு வருகிறார். தனது திறமையை மேம்படுத்த அதிக நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த சாதனை அவரது கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த பரிசாகும்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளின் தாயான அவர், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பல திறமையான நடனக் கலைஞர்களிடையே தனது மகள் திகழ்ந்தது மிகப்பெரிய தருணமாக இருந்ததாக கூறினார்.

“முன்பு உள்ளூர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டிருந்த யோஷ்னாவுக்கு இது புதிய அனுபவம். சவாலாக இருந்தாலும் அதே நேரத்தில் மிகுந்த உற்சாகத்தையும் அளித்தது. அவளது நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்றார்.

இவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் மலேசியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.இதற்கிடையில், அந்தச் சிறுமியின் தந்தை, மலாக்கா மாநில காவல் துறை தலைமையகத்தில் (IPK) பணியாற்றும் ASP எஸ். லோகேந்திரன், தனது மகளின் பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்ததாக கூறினார்.

“அவள் எடுத்த உழைப்பின் பலனை பார்க்கும் போது நான் மிகுந்த உணர்ச்சியடைந்தேன். இது என் வாழ்க்கையின் மிகப் பெருமையான தருணங்களில் ஒன்றாகும்,” என்றார்.வேலைப் பொறுப்புகள் காரணமாக செங்டூவுக்கு மனைவி மற்றும் மகளுடன் செல்ல முடியாதபோதிலும், போட்டியின் அனைத்து முன்னேற்றங்களையும் குடும்பத்தினரால் பகிரப்பட்ட வீடியோக்கள் மூலம் தொடர்ந்து கவனித்ததாக அவர் தெரிவித்தார்.

“தொலைவில் இருந்தாலும், நான் அங்கேயே இருந்தது போலவே உணர்ந்தேன். சர்வதேச மேடையில் அவள் நம்பிக்கையுடன் நடனம் ஆடியது மிகவும் பிரமிக்க வைத்தது. எங்கள் குடும்பத்தையும் நாட்டையும் அவள் பிரதி நிதித்துவப்படுத்திய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது,” என்றார்.

“The Dance of Asia” என்பது பல்வேறு நடன வகைகளை கொண்ட சர்வதேச மேடையாகும். இதில் பாலே, பெல்லி டான்ஸ், ஹிப் ஹாப், K-pop மற்றும் லத்தீன் நடனம் போன்ற பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.