துபாய், மார்ச் 22: “ஈரானின் எதிரிகளுடன் தொடர்புடைய” கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் கடல் அமைப்பில் ஈரானின் பிரதிநிதி தெரிவித்துள்ளார் என ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கருத்தை, சீனாவின் செய்தி நிறுவனம் சின்ஹுவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட பேட்டியில் அலி மூசவி தெரிவித்தார். இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 48 மணி நேரத்திற்குள் அந்த ஜலசந்தி “முழுமையாக திறக்கப்படவில்லை” என்றால், ஈரானின் மின் நிலையங்களை தாக்குவோம் என்று எச்சரித்ததற்கு முன்பாக வெளியிடப் பட்டது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழ்நிலையில், ஈரானின் தாக்குதல்களின் அச்சம் காரணமாக பல கப்பல்கள் அந்த குறுகிய ஜலசந்தி வழியாக செல்லத் தயங்குகின்றன. உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த வழியாகச் செல்லும் நிலையில், இது உலகளாவிய நிலையில் எரிப்பொருள் நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஈரான் தூதராகவும் உள்ள அலி மூசவி, கடல் பாதுகாப்பை மேம்படுத்தவும் கடலோர பணியாளர்களை பாதுகாக்கவும், சர்வதேச கடல்சார் அமைப்பான IMO உடன் தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், “ஈரானின் எதிரிகளுடன் தொடர் பில்லாத” கப்பல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தெஹ்ரானுடன் ஒருங்கிணைத்து, அந்த ஜலசந்தியை கடக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
“தூதரக முயற்சிகளே ஈரானின் முதன்மை முன்னுரிமையாகும். ஆனால், தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப் படுவதும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை உருவாகுவதும் அதைவிட முக்கியமானவை,” என்று மூசவி தெரிவித்தார்.
மேலும், தற்போதைய ஹோர்முஸ் ஜலசந்தி நிலைமைக்கு காரணம், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களே என அவர் குறிப்பிட்டார்.




