ஷா ஆலம், 21 மார்ச்: யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம், மக்களின் ஒற்றுமையைச் அச்சுறுத்தும் எந்த ஒரு தீய சக்திகளையும் சமரசமின்றி ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் நாட்டின் நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
சமூகத்தில் வெறுப்பு, பதற்றம் அல்லது பிளவை ஏற்படுத்தும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“கடந்த ஆண்டு ஹரி ராயா பெருநாளில் நான் வழங்கிய அறிவுரையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால் பலர் அதை மறந்து விட்டதாகவோ அல்லது பொருட்படுத்தாமல் இருப்பதாகவோ தெரிகிறது. அதாவது, மக்களின் ஒற்றுமையை அச்சுறுத்தும் எந்த தீய சக்தியும் சமரசமின்றி ஒடுக்கப்பட வேண்டும்,” என்று அரசர் 2026-ம் ஆண்டுக்கான ஐடில்ஃபித்ரி வாழ்த்துரையில் தெரிவித்தார்.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை (sensitive issues) கையாள்வது கவனமாகவும், துல்லியமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்களின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் அரசர் எச்சரித்தார்.
“அதிகாரிகளால் முக்கிய பிரச்சினைகளின் மேலாண்மை கவனமாகவும், தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும். எந்தத் தவறுக்கும் இடமில்லை.
“எடுக்கப்படும் நடவடிக்கை உண்மையானதாகவும், உறுதியானதாகவும், துல்லியமான தாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இதனால் நாட்டின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை அரிக்கப் படாமல் இருக்கும்,” என்று அரசர் கூறினார்.
அதேவேளையில், மலேசிய மக்கள் அனைவரும் ருக்குன் நெகாரா (Rukun Negara) கொள்கைகளை, குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் நாகரிகம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மதித்து நடக்குமாறு அரசர் அழைப்பு விடுத்தார்.
சமூகத்தில் பல்வேறு இனங்கள் வாழும் நிலையில், அநாகரிகமான போக்கும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயல்களும் — குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் — பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம் அநாகரிகமானவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அது வேறு இனத்தவரிடையோ அல்லது ஒரே இனத்துக்குள் இருந்தாலும் சரி,” என்று அரசர் தெரிவித்தார்.
மதம் மற்றும் நாட்டின் உணர்வுகளைத் தொடும் சம்பவங்கள், புனித சொற்களை தவறாகப் பயன்படுத்துதல், தேசிய சின்னங்களை அவமதித்தல், வெறுப்பு தூண்டும் கருத்துகள் ஆகியவற்றுக்கு எதிராக அரசர் கவலை வெளியிட்டார்.
அத்துடன், மக்கள் ஒற்றுமையாக இருந்து, நாட்டின் அமைதியைப் பாராட்டுமாறு அவர் நினைவூட்டினார்.
“‘பெர்சத்து துகோ, பெர்சிராய் ரோபோ ’ (Bersatu Teguh, Bercerai Roboh) என்ற பழமொழியை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். பிற நாடுகள் போரில் சிக்கி இருக்கும் வேளையில், நாம் அனுபவித்து வரும் அமைதிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்,” என்று அரசர் கூறினார்.
இதனிடையே, ரமலான் முழுவதும் தேவை உடையவர்களுக்கு உதவி செய்யவும், நல்ல பழக்கங்களை தொடரவும் மக்களுக்கு அரசர் அழைப்பு விடுத்தார்.
யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் மக்களின் நலனுக்காகவும், நாட்டின் செழிப்பு காகவும் பிரார்த்தனை செய்ததுடன், பண்டிகைக் காலத்தில் சாலை விதிகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு நினைவூட்டினார்.
“சாலையில் கவனமாக இருங்கள். உணவை அளவோடு உட்கொள்ளுங்கள். செலாமாட் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி. மாஃப் ஜாஹிர் வபாத்தின்,” என்று அரசர் தனது பெருநாள் வாழ்த்தை நிறைவு செய்தார்.




