கங்கார்: கோலா பெர்லிஸ், கம்போங் புலாவ் கெத்தாமில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU JPM) மூலம் புதிய வீடுகளைக் கட்டித் தர பிரதமர் அலுவலகம் உதவும்.
தீ விபத்தில் முழுமையாகச் சேதமடைந்த ஐந்து வீடுகளும் தலா 80,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் புதிதாகக் கட்டப்படும் என்று பெர்லிஸ் மாநில பாக்காத்தான் ஹராப்பான் தலைவர் நூர் அமின் அஹ்மட் தெரிவித்தார்.
"புதிய வீடுகளைக் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்கு, நிலத்திற்கான ஒப்புதலை மாநில அரசாங்கம் வழங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
இன்று சம்பவ இடத்திற்குச் சென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பிலான உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவருடன் பெர்லிஸ் மாநில ICU JPM இயக்குனர் மஸ்னா மூசாவும் உடனிருந்தார்.
"பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் சந்தித்தோம். இந்த உதவிக்கு அவர்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர். சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என நம்புகிறேன்," என்று நூர் அமின் மேலும் கூறினார்.
வீடுகள் முழுமையாக எரிந்த ஐந்து குடும்பங்களுக்கு மொத்தமாக 10,000 ரிங்கிட் ரொக்க உதவியும், தீயினால் பகுதியளவு பாதிக்கப்பட்ட மூன்று வீடுகளின் உரிமையாளர்களுக்கு 3,000 ரிங்கிட் ரொக்க உதவியும் பிரதமர் சார்பில் ICU JPM மூலம் வழங்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று மதியம் ஏற்பட்ட இத் தீ விபத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஐந்து குடும்பங்களின் வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தன. வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததாலும், பலத்த காற்றின் காரணமாகவும் தீ வேகமாகப் பரவியது. இதனால், நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருந்த அவர்களின் கனவு தகர்ந்தது.
பெர்லிஸ், கம்போங் புலாவ் கெத்தாமில் தீ விபத்தில் முழுமையாகச் சேதமடைந்த ஐந்து வீடுகளும் அரசாங்க ஒதுக்கீட்டில் புதிதாகக் கட்ட பிரதமர் அலுவலகம் உதவும்
19 மார்ச் 2026, 8:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


