மேற்கு ஆசிய மோதல்: பெரும்பாலான நாடுகளில் வான்வெளி திறக்கப்பட்டதால் வெளியேற்றும் நடவடிக்கை ஒத்திவைப்பு 

19 மார்ச் 2026, 6:17 AM
மேற்கு ஆசிய மோதல்: பெரும்பாலான நாடுகளில் வான்வெளி திறக்கப்பட்டதால் வெளியேற்றும் நடவடிக்கை ஒத்திவைப்பு 

கோலாலம்பூர், மார்ச் 19 - மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப் பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள மோதல் மண்டலங்களிலிருந்து மலேசியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மலேசியர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் அல்லது அவசரச் சூழ்நிலைகள் போன்ற குறிப்பிட்ட சூழல்களில், அரசாங்கம் தொடர்ந்து உதவி மற்றும் வசதிகளை வழங்கும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பெரும்பாலான நாடுகளில் வான்வெளி திறக்கப்பட்டு, மலேசியாவிற்கு விமானங்கள் இயக்கப்படுவதால், தாய்நாடு திரும்ப விரும்பும் மலேசியர்கள் வர்த்தக விமானச் சீட்டுகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று துபாயில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் அதன் X சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயண முகவர் நிறுவனங்கள் அல்லது விமான நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பயணங்களுக்கு, பயணிகளை நிர்வகிப்பதற்கும் அவர்களை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கும் முக்கியப் பொறுப்பு அந்தச் சேவைகளை வழங்கும் தரப்பினரையே சாரும் என்று MKN கூறியது.

"வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, மலேசிய அரசாங்கம் மலேசியர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதோடு, அப்பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது," என்று அது மேலும் குறிப்பிட்டது.

வெளியுறவு அமைச்சகம் அவ்வப்போது வெளியிடும் பயண ஆலோசனைகளைப் பார்க்குமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள், மலேசியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் பத்திரமாக நாடு திரும்பினர்.

அந்த விமானத்தில், தாய்லாந்தைச் சேர்ந்த ஐந்து பேர், இந்தோனேசியா மற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த தலா ஒருவர் என குடிமக்கள் அல்லாத ஏழு குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்.

மார்ச் 12 அன்று, கட்டாரின் தோஹாவில் இருந்து மேலும் 179 மலேசியர்கள் இந்த நடவடிக்கையின் கீழ் பத்திரமாக நாடு திரும்பினர்.

இந்த எண்ணிக்கையில், சிக்கித் தவித்த 59 மலேசியர்களும், கட்டாரில் வசித்து சொந்தமாக விமானச் சீட்டுகளை வாங்கிய மலேசியர்களும் அடங்குவர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) வந்தடைந்த பிறகு, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு இணைப்பு விமானங்களில் பயணம் மேற்கொண்டனர்.

வர்த்தக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப் பட்டதாலும், மலேசியத் தூதரகங்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு முயற்சிகளாலும், பிராந்தியம் முழுவதும் விமான நிலையங்களில் சிக்கித் தவித்த பெரும்பாலான மலேசியர்களின் பிரச்சினைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப் பட்டுள்ளன என்று விஸ்மா புத்ரா மார்ச் 16 அன்று தெரிவித்தது.

பஹ்ரைன், ஈராக், லெபனான், ஓமன், கட்டார் அல்லது சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால் எந்த மலேசியரும் சிக்கித் தவிக்க வில்லை என்று மலேசியத் தூதரகங்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.