இஸ்கந்தர் புத்ரி: சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற சூப்பர் லீக் காற்பந்து போட்டியில், ஜோகூர் தாருல் தாசிம் (ஜே.டி.டி) அணி, பி.டி.ஆர்.எம் எப்.சி. அணியை 7-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி, தனது அபார ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
தெற்குப் புலிகளின் ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே ஆக்ரோஷத்தைக் காட்டியது. லா'வியர் கார்பின்-ஓங் தட்டிக் கொடுத்த பந்தை பெர்க்சன் டா சில்வா தலையால் முட்டி கோலாக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜே.டி.டி-யின் முயற்சிக்கு ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. பெனால்டி பகுதிக்குள் மானுவல் ஹிடால்கோ தட்டிக் கொடுத்த பந்தை யாகோ சீசர் கோலாக மாற்றி அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இரண்டாவது கோல் 20-வது நிமிடத்தில் பதிவானது. இம்முறை கார்பின்-ஓங் கொடுத்த பந்தை இக்னாசியோ மெண்டெஸ் பெனால்டி பகுதிக்கு வெளியிலிருந்து பலமாக உதைத்து கோலாக்கினார்.
நான்கே நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்டூவர்ட் வில்கின் தனது பலமான உதையின் மூலம் மூன்றாவது கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம், முதல் பாதி ஆட்டத்தை ஜே.டி.டி 3-0 என்ற வலுவான முன்னிலையுடன் நிறைவு செய்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் ஜே.டி.டி-யின் கோல் வேட்டை தொடர்ந்தது. 51-வது நிமிடத்தில், மானுவல் ஹிடால்கோ கொடுத்த பந்தினால் பெனால்டி பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தை ஸ்டூவர்ட் வில்கின் தனக்கு சாதகமாக்கி, அணியின் நான்காவது கோலை அடித்தார்.
ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில், ஜெய்ரோ டா சில்வா ஒரு கோல் அடித்தார். ஆனால், VAR ஆய்வுக்குப் பிறகு அவர் ஆஃப்சைடு நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதால் அந்தக் கோல் நிராகரிக்கப்பட்டது.
ஜே.டி.டி-யின் ஐந்தாவது கோல் 80-வது நிமிடத்தில் முகமது நஸ்மி ஃபைஸ் மன்சோர் தட்டிக் கொடுத்த பந்தை ஜெய்ரோ டா சில்வா மாற்று கோல் காவலரான நூர் ஹக்கீம் ஹமிடுனைத் தாண்டி கோலுக்குள் தள்ளினார்.
சரியாக ஒரு நிமிடத்திற்கு பிறகு, மீண்டும் நஸ்மி ஃபைஸின் உதவியுடன், ஜெய்ரோ டா சில்வா பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து கோலடித்து, அணியின் முன்னிலையை 6-0 ஆக உயர்த்தினார்.
ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில், ஜெய்ரோ டா சில்வா கொடுத்த பந்தை பெர்க்சன் டா சில்வா கோலாக்கி, ஜே.டி.டி-யின் 7-0 என்ற மாபெரும் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சில எதிர்-தாக்குதல்களை நடத்தியும் பி.டி.ஆர்.எம் எப்.சி அணியால் ஜே.டி.டி-யின் வலுவான தற்காப்பு அரணைத் தகர்க்க முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம், சூப்பர் லீக்கில் ஜே.டி.டி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது. மேலும், 2015-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 12-வது முறையாக லீக் வெற்றியாளர் பட்டத்தை வென்று தங்களின் சாதனைப் பயணத்தை தொடர்கிறது.
சூப்பர் லீக்: பி.டி.ஆர்.எம் எப்.சி-யை 7-0 என வீழ்த்தி, ஜே.டி.டி அபார வெற்றி!
19 மார்ச் 2026, 3:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


