2026 ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல முக்கியப் போட்டிகளுக்கு தயாராகும் தேசிய டெக் பால் அணியை வலுப்படுத்த MTA விரும்புகிறது

17 மார்ச் 2026, 7:44 AM
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல முக்கியப் போட்டிகளுக்கு தயாராகும் தேசிய டெக் பால் அணியை வலுப்படுத்த MTA விரும்புகிறது

கோலாலம்பூர், மார்ச் 17 – 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல முக்கியப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில், தேசிய டெக் பால் அணியை வலுப்படுத்த முன்னாள் செப்பாக் தக்ராவ் வீரர்கள் உட்பட புதிய திறமையாளர்களைக் கண்டறிய மலேசிய டெக்பால் சங்கம் (MTA) விரும்புகிறது.

டெக்பால் விளையாட்டுடன் செப்பாக்தக்ராவ் வீரர்களின் அடிப்படைத் திறன்கள் ஒத்துப் போவதால், நாட்டின் ஆட்டத் தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று அதன் தலைவர் ஜே. சிவகுமார் கூறினார்.

"முன்னாள் செப்பாக் தக்ராவ் வீரர்களை நாங்கள் அழைக்க விரும்புகிறோம். மலேசிய செப்பாக் தக்ராவ் கூட்டமைப்புடன் (PSM) ஒரு நல்ல ஒத்துழைப்பை ஏற்படுத்தி, அந்த விளையாட்டில் தொடராத திறமையாளர்களை டெக்பால் பக்கம் ஈர்க்க விரும்புகிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"2018-இல் நமது நாட்டைப்  பிரதிநிதித்த ஒரு பெண் தடகள வீரர், உண்மையில் சபாவில் இருந்து வந்த ஒரு முன்னாள் செப்பாக்தக்ராவ் வீராங்கனை. அவர் தாய்லாந்து வீரரைத் தோற்கடித்ததற்குக் காரணம், அவர் 100 விழுக்காடு செப்பாக் தக்ராவ் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதே ஆகும்," என்று அவர் மேலும் குறிப் பிட்டார்.

இருப்பினும், புதிய வீரர்களைச் சேர்ப்பதற்கான முயற்சிக்கு நிரந்தரப் பயிற்சி வசதிகள் இல்லாதது ஒரு பெரிய தடையாக இருப்பதாக சிவகுமார் ஒப்புக்கொண்டார்.

"சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கு நிரந்தரப் பயிற்சி இடம் இல்லை. பொருத்தமான வசதிகள் இல்லாததால், நாங்கள் தீவிரமாக இல்லை என்று அவர்கள் உணரலாம்," என்றார்.

"உண்மையில், தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள எங்களுக்கு ஒரு பூப்பந்து அல்லது செப்பாக்தக்ராவ் அரங்கம் அளவிலான ஒரு மண்டபம் மட்டுமே தேவை," என்று அவர் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிப் பேசிய சிவகுமார், மலேசியா ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், தாய்லாந்து முக்கிய சவாலாக இருக்கும் என்றும் கூறினார்.

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், எங்கள் யதார்த்தமான இலக்கு வெண்கலப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதாகும். ஆனால், முறையான பயிற்சியின் மூலம், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

இந்த மதிப்புமிக்க போட்டிக்கு முன்பு, தேசிய அணி சன்யாவில் நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய டெக்பால் லீக் போன்ற பல ஆயத்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.