தாய்லாந்திலிருந்து போலித் துப்பாக்கிகளை கடத்தி வந்தவர்கள்   கடந்த சனிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்  

17 மார்ச் 2026, 7:11 AM
தாய்லாந்திலிருந்து போலித் துப்பாக்கிகளை கடத்தி வந்தவர்கள்   கடந்த சனிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்  

தாய்லாந்திலிருந்து பலவகையான போலித் துப்பாக்கிகளைக் கடத்தி வந்த பொறியாளர் மற்றும் அவரது பி-ஹெய்லிங் ஊழியரான நண்பர் கடந்த சனிக்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

குபாங் பாசு மாவட்ட காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ராட்ஸி அப்துல் ரஹீம் கூறுகையில், 27 மற்றும் 21 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் மாலை 6 மணியளவில் புக்கிட் காயூ ஹிதாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் பெரோடுவா மைவி காரில் இருந்த போது கைது செய்யப் பட்டனர்.

அந்த வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் கார்பைன் மாடல் M4A1 ரக போலித் துப்பாக்கி ஒன்றும், அதன் தோட்டாக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பயணிகள் இருக்கைக்கு அடியில் N4 மாடல் போலித் துப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்கூடும் கண்டெடுக்கப்பட்டது.

“பின்புற பானெட்டில் நடத்தப்பட்ட மேலதிக சோதனையில், போலி கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கூடுகள் அடங்கிய எட்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

"மேலும், M4A1 மாடல் தோட்டாக்கூடுகள் அடங்கிய மூன்று பெட்டிகள், AAP-01 தோட்டாக்கூடு அடங்கிய ஒரு பெட்டி, மற்றும் மணித் தோட்டாக்கள் கொண்ட இரண்டு பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டன."

"அதைத் தவிர, ஆறு சிறிய பொட்டலங்களில் மணித் தோட்டாக்கள் மற்றும் 10 எரிவாயு பாட்டில்களும் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டன," என்று அவர் இன்று குபாங் பாசு மாவட்ட காவல் துறைத் தலைமையகத்தில் (IPD) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பொறியாளர் டெலிகிராம் செயலி குழு ஒன்றில் இணைந்த பிறகு போலித் துப்பாக்கிகளை வாங்குபவர்களைக் கண்டறிந்தது தெரியவந்துள்ளது என்று முகமட் ராட்ஸி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் தனது நண்பரை மார்ச் 13 அன்று தாய்லாந்திற்கு அழைத்துச் சென்று, மறுநாள் இருவரும் மலேசியாவிற்குத் திரும்பியுள்ளனர்.

"இந்த போலித் துப்பாக்கிகள் ஹாத்யாய் பகுதியில் சுமார் ரிம 6,500 மொத்த செலவில் வாங்கப்பட்டுள்ளன."

"போலி கைத்துப்பாக்கியின் விலை சுமார் ரிம 900 ஆகவும், போலி நீள் துப்பாக்கியின் விலை சுமார் ரிம1,200 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது," என்றார்.

ஆரம்பத்தில் சந்தேக நபர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக இந்த ஆயுதங்களை வாங்கியதாகவும், பின்னர் டெலிகிராமில் விளம்பரம் செய்து விற்க முயன்றதாகவும் காவல்துறை நம்புவதாக அவர் கூறினார்.

பினாங்கிலிருந்து வந்த அவ்விரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய ஆயுதச் சட்டம் 1960-இன் பிரிவு 36-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஓராண்டுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ரிம 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.