ஷா ஆலம், மார்ச் 16 - மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களை மீண்டும் 'வீட்டிலிருந்தே பணிபுரிய' (Work From Home) அனுமதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால், அது குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஷா ஆலமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டம் ஒரு நேர்மறையான ஆலோசனையாக இருந்தாலும், அனைத்துத் துறைகளுக்கும் இது பொருத்தமாக இருக்காது என்று சுட்டிக்காட்டினார்.
உதாரணத்திற்குக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பு கற்றல் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தே கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறை மாணவர்களின் கல்வித் திறனில் ஏற்படுத்திய தாக்கங்களை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம்.
எனவே, தற்போதைய நிலையில் கல்வித்துறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவசரத் தேவை ஏதுமில்லை, இருப்பினும் இது குறித்த ஆலோசனைகளைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் தினசரி பயணச் செலவைக் குறைக்கவும் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் இந்த 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் கமில் அப்துல் முனிம் பரிந்துரை செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அரசு ஊழியர்களுக்கு இத்தகைய சலுகையை வழங்குவது தொடர்பாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்த இறுதி முடிவு நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது அண்டை நாடான தாய்லாந்து, எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காகத் தனது அரசு நிறுவனங்களில் இத்தகைய முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதலால், உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகப் பாதையான 'ஹார்முஸ்' நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த இக்கட்டான சூழலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
இத்தகைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், நாட்டின் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.








