ஜம்ரி வினோத், தமிம் தஹ்ரி தாய்லாந்திற்குத் தப்பி ஓட்டம்: காவல்துறை உறுதி

14 மார்ச் 2026, 2:25 AM
ஜம்ரி வினோத், தமிம் தஹ்ரி தாய்லாந்திற்குத் தப்பி ஓட்டம்: காவல்துறை உறுதி

கோலாலம்பூர், மார்ச் 14: பல வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வரும் சுயேச்சை மதபோதகர் ஜம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் தமிம் தஹ்ரி ஆகியோர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், சம்பந்தப்பட்ட இருவரையும் தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

பிப்ரவரி 7ஆம் தேதி தலைநகரில் நடந்த பேரணியில் ஜம்ரி ஆற்றிய உரை தொடர்பான விசாரணை, தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தையோ அல்லது பீதியையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டதற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 505 (பி)-யின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

மேலும், இந்திய சமூகத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் தொடர்பாக ஜம்ரி மீதான விசாரணை பினாங்கு வழக்குரைஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசநிந்தனைச் சட்டம் 1948, பிரிவு 4(1)-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

இதற்கிடையில், கெடா, லங்காவி தீவில் உள்ள பழைய கோயில் தளத்தில் இந்துக்களின் புனித சின்னமான சூலத்தை சேதப்படுத்திய தமிம் தஹ்ரி தொடர்பான விசாரணை அறிக்கை, கெடா வழக்குரைஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தண்டனைச் சட்டம் பிரிவு 295-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

"அந்த இருவரும் வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் சுமத்தப்படும்," என்று அவர் இன்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பொது அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுடன் காவல்துறை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், இவ்விஷயத்தில் உறுதியாகச் செயல்படும் என்றும் முகமட் காலிட் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.