2030-க்குள் பன்றி இறைச்சி சுயசார்பு விகிதத்தை 90 விழுக்காடு உயர்த்த அரசாங்கம் இலக்கு 

12 மார்ச் 2026, 7:10 AM
2030-க்குள் பன்றி இறைச்சி சுயசார்பு விகிதத்தை 90 விழுக்காடு உயர்த்த அரசாங்கம் இலக்கு 

கோலாலம்பூர், மார்ச் 12: நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பன்றி இறைச்சி சுயசார்பு விகிதத்தை (SSR) 2024-இல் உள்ள 67.8 விழுக்காட்டிலிருந்து 2030-க்குள் 90 விழுக் காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டத்தோ சான் ஃ பூங் ஹின், சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டுத் தேவையின் ஒரு பகுதி இன்னும் இறக்குமதி விநியோகத்தையே சார்ந்துள்ளது என்பதை இந்த விகிதம் காட்டுவதாகக் கூறினார்.

சரவாக்கிலிருந்து தீபகற்பத்திற்கு உயிருடன் பன்றிகளை ஏற்றுமதி செய்வது மற்றும் பண்ணை உற்பத்தித்திறனை அதிகரிக்க விலங்கு மற்றும் ஸூனோடிக் நோய்த் தடுப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் உற்பத்தி தொடர்ந்து வலுப்படுத்தப் படும் என்று அவர் கூறினார்.

"உற்பத்தி செலவுகள் மற்றும் சந்தை விலைகளில் உலகளாவிய கால்நடைத் தீவன விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைச் சமாளிக்க, பண்ணை அளவில் பன்றி விலை மற்றும் தீவனச் செலவுகள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன," என்று அவர் இன்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டில், பண்ணையில் உயிருள்ள பன்றியின் சராசரி விலை கிலோ கிராமுக்கு சுமார் RM17.80 ஆக இருந்தது என்றும், 2040-க்குள் இறக்குமதி செய்யப்படும் சோளத்தைச் சார்ந்திருப்பதை 30 விழுக்காடு குறைக்க, நாட்டில் பெரிய அளவிலான தானியச் சோளப் பயிரிடுதலை அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்றும் சான் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நோய்க் கட்டுப் பாட்டை மேம்படுத்தவும் சுற்றுச்சூழல் மாசு பாட்டைக் குறைக்கவும் உதவும் மூடப்பட்ட பண்ணை அமைப்பு முறையை அமல்படுத்துவதன் மூலம், பன்றி வளர்ப்புத் துறையை நவீனமயமாக்க அரசாங்கம் ஊக்குவிப்பதாக சான் கூறினார்.

திறந்த பண்ணை முறையில் இருந்து மூடப்பட்ட பண்ணை முறைக்கு மாறும் பண்ணையாளர்களுக்கு, துரிதப் படுத்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவு மற்றும் 2023 முதல் 2027 வரையிலான காலத்திற்கு வருமான வரி விலக்கு உள்ளிட்ட வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில் பினாங்கு, கம்போங் செலாமாட்டில் செயல்படுத்தப்பட்டது போல, கால்நடை கழிவுகளைப் பதப்படுத்தும் உயிர்வாயு ஆலை (biogas) போன்ற நவீன தொழில்நுட்பங்கள், துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு பன்றித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மற்ற நாடுகளில் உள்ள நவீன வளர்ப்பு மாதிரிகளை ஆய்வு செய்ய அமைச்சு தயாராக இருப்பதாகவும் சான் கூறினார்.

சரவாக்கில் ஒரு பன்றி வளர்ப்புப் பகுதி (Pig Farming Area - PFA) உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இத்துறையின் வளர்ச்சியை வலுப்படுத்த மேலும் மூன்று பகுதிகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.