கோலாலம்பூர்: ஈரான்-அமெரிக்கா சண்டையால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்பு ஒரு பீப்பாய் விலை சுமார் 85 முதல் 90 டாலர் வரை இருந்த நிலையில், சமீப காலமாக அதன் விலை 100 டாலரையும் தாண்டிவிட்டது.
விமான நிறுவனங்களின் மொத்தச் செலவில் 20 முதல் 30 விழுக்காடு எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது. இதனால், செலவுகள் அதிகரித்துள்ளதால் விமான நிறுவனங்கள் தற்போது டிக்கெட் விலையையும் எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தையும் (fuel surcharge) உயர்த்தத் தொடங்கியுள்ளன.
அதன்படி, மலேசியாவில் Batik Air, Firefly போன்ற விமான நிறுவனங்கள் இன்று, மார்ச் 11 முதல், எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
Malaysia Airlines நிறுவனமும் இரண்டு கட்டங்களாக இந்தக் கட்டணத்தை மறுசீரமைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆசியா மற்றும் இதர அனைத்துலக விமான நிறுவனங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எண்ணெய் விலை உயர்வின் சுமையை விமான நிறுவனங்கள் பயணிகள் மீது சுமத்தினால், விமான டிக்கெட் விலைகள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




