பணிக்கு எடுத்து வரப்பட்ட அரிவாள் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பான பணி நடவடிக்கைகளை செயல் படுத்துவதில் முதலாளி தவறி உள்ளார்

11 மார்ச் 2026, 2:01 AM
பணிக்கு எடுத்து வரப்பட்ட அரிவாள் தாக்கி மாணவர்  உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பான பணி நடவடிக்கைகளை செயல் படுத்துவதில் முதலாளி தவறி உள்ளார்

கோலாலம்பூர்: பேராக், தெலுக் இந்தானில் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட அரிவாள் தாக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சங்கம் (MSOSH) அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

வேலைக்கான உபகரணங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பான பணி நடவடிக்கைகளை செயல் படுத்துவதில் முதலாளி தவறியதை இந்த சோக சம்பவம் காட்டுகிறது என்று MSOSH தலைவர் டத்தோ வீரா அஹ்மட் ஃபக்ருல் அனுவார் இஸ்மாயில் கூறினார்.

"இத்தகைய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பணியிட நடவடிக்கைகளைக் கையாள்வதில் அலட்சியம் இருப்பது கண்டறியப்பட்டால், குறிப்பாக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (JKKP), சம்பந்தப்பட்ட முதலாளி மற்றும் தொழிலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மரணத்திற்கு அலட்சியமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதிக்காக சட்டப்பூர்வ நடவடிக்கையை பரிசீலிக்க உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை என்றும் அஹ்மட் ஃபக்ருல் வலியுறுத்தினார்.

விவசாயம், நில வடிவமைப்பு மற்றும் களப்பணி போன்ற கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தும் துறைகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் முயற்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, கூர்மையான கருவிகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு உறைகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவது போன்ற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

"பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு MSOSH தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு தீவிர நினைவூட்டலாக அமையும் என நம்புகிறோம்," என்றார் அவர்.

நேற்று, தெலுக் இந்தான் விவசாய தொழிற்கல்வி கல்லூரி மாணவரான 17 வயது ஆதம் ஃபைசால், தெலுக் இந்தான், கம்போங் செலாபாக், பத்து 4-இல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட அரிவாள் கழுத்தில் பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருடன் பயணம் செய்த 18 வயது நண்பர் கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, 39 மற்றும் 52 வயதுடைய இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.